நிசாகந்திப் பூ

உதிர்ந்து போவதற்கு
ஒரு பூவும்
பறந்து போவதற்கு
ஒரு பறவையுமற்று
கடந்து போன
எனது சரித்திரத்தின்
காலண்டரில் ...

பாலைவனத்தை
விலை பேசிக்கொண்டிருந்த
மழையில்லாக் காலத்தினூடே ...
என் ஒட்டிய வயிறை
தடவிக்கொண்டே
குட்டி ஆட்டினை
விற்க வேண்டி வந்த
விதியின் விளையாட்டில்
வற்றிய நதியினை
நடைபாதையாக்கி
வறண்ட சமுத்திரத்தில்
வீடு கட்டுமெனது
நினைவுகளில் ...
ஒரு படி விதைதானமென
கொண்டுவந்து தந்தாய்
அந்த
நிசாகந்திப் பூவினை ...

நப்பிக்கையின் கைகளிலிருந்து
விடுபட்ட எனது
விரல்களில்
திரி ஏற்றி வைத்துப்போன
வெடி மருந்துக் கிடங்கின்
சாவியில்
எழுதப்பட்ட எனது
தலை விதி ஸ்பரிசத்தில் -
ஆயுதக்கிடங்கின்
முன்னால்
தீ படர்ந்த விரல்களில்
பூ வோடு ஆயுளுக்கும்
காத்திருப்பேன் ....

வெயிலில் பூ கருகுமோ ?
அல்லது
அதற்கு முன்னால்
வெடிதிரியில் நான் கருகுவேனோ ?
என்றறியாது ..

எழுதியவர் : பாலா (14-Jun-15, 8:18 pm)
பார்வை : 140

மேலே