இது கவிதையல்ல
ஓவியங்களைத்
தான் பறக்கும் திசைகளில் வரைந்துவிட்டு
"நீ வந்து பார்"...
என்று சொல்லிவிட்டுப் போனது வண்ணத்துப் பூச்சி.
கிளைகளில் ஆடிக் கொண்டிருந்த வௌவால்
"நீ என் தலை கீழாய் நடக்கிறாய்?" -என்றது.
புழு கொத்திய மரங்கொத்தி...
அலட்சியமாய் தலையைத் திருப்பி...
"நீயும் இதுவும் ஒன்றுதான்" என்றது.
வர்ணங்கள் தீட்டிய கொம்பை ஆட்டியபடி
வந்த மாடு...
"பார்த்தியா? வர்ணங்களை...
நாளையிலிருந்து நான்தான் இந்தக் கட்சியின்
மாவட்டச் செயலாளர்..." என்றது.
குளத்தில் தெரிந்த நிலா...
" நீ கவிதை எழுதிக் கிழித்தது போதும்...
சின்னப் பசங்கள் என் மேல் அசிங்கம் செய்கிறார்கள்...
அவர்களை முதலில் கண்டித்து வை..." என்றது.
இப்படித்தான்...
அவ்வப்போது என் நினைவுகளில்...
நிகழ்ந்து விடுகிறது
ஏதாவதொரு கூத்து.