சிதையெரி நகரம்

எனதுடலை
சிதையிலேற்றும் போது
ஒரு உயிர் நடமாடிய
நகரத்தை தீயிலிடுகிறீர்கள்
என்பதை அறிவீர்களா ?

தீக்கனல் மூச்சாயெரிந்தென்னை
உந்தித் தள்ளியவொரு
உயிரெஞ்சினொன்று
தனது இறுதிப் பயணத்தில்
எரிந்து கொண்டிருக்கிறது !

எல்லையற்ற காட்சிகளை
ஆவணங்களாய்
அடுக்கி வைத்திருந்தயெனது
கண் காமெராவின்
ஒளியற்ற படச்சுருள்கள்
பற்றியெரிவதை அறிவீர்களா ?

வெப்பக் குருதியாறோடிய
இரத்தக் குழாய்களும்
இசை வழிந்தோடிய யெனது
நரம்புக் கம்பிகளும்
பொசுங்குகிறது தீக்கனல்களில் !

வாசனை நரம்புகளில்
முண்டிக் கிடந்து
பாய் விரித்த
நாசித் துறைமுகம்
சதையெரி சுடுகாட்டு
வாசமறியாது
கருகிக் கொண்டிருக்கிறது !

பிறப்பின் பெருக்கங்களோடி
நிறைந்து
மரணத்தின் இறுக்கமிறங்கி
தூர்ந்துபோன
எனது நவதுவாரங்களில்
போக்குவரத்து முற்றிலும்
நின்று போய் -
வெறிச்சோடிப் போன
முச்சந்திகளின்
பழம்வீதிகளாயான
எனது தோல்கள்
பழைய நாகரீகங்களின்
மொகஞ்சதாரா ,ஹராப்பாகளாக
சுருங்கி உரிந்து
சாம்பலாகிக் கொண்டிருக்கிறது !

அனைத்திற்கும் விலைவைத்த
வியாபாரச் சந்தை
ஆன்மீகம் மிதக்கும்
அழகுக் கோவில்
கொலை களவு விசாரணை
நடக்கும் நீதிமன்றம்
சதா நோய்களின் குடியிருப்பான
மருத்துவமனை யென
நான்கறைகள் கொண்ட
என்னிதயம்
வெந்தெரிந்து அறைகளற்று
கருகுகிறது ....

சந்திப்புகளின் நெகிழ்வுகள்
தரித்த
முத்தங்களின் பயணியர் விடுதி ...
உணர்ச்சிகளின் அருங்காட்சியகமென
முழுவதும்
அரங்கு நிறைந்து...
எப்போதும் எவரெவராலோ
நிரம்பி வழிந்த
ஒரு சமுதாயத்தை
நீங்கள்
எரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
என்பதை அறிவீர்களா ?

எழுதியவர் : பாலா (15-Jun-15, 8:28 pm)
பார்வை : 97

மேலே