புதிய தூரிகை புதிய சித்திரங்கள்

(இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ..வரலாறும் வேறாய் இருந்தது...அன்று தீட்டிய சித்திரங்களில் சில வரலாற்று சதியால் கிழித்தெறியப் பட்டாலும் ..வேட்கை இருக்கத்தான் செய்யும்....நீறு பூத்த நெருப்பாய்...)விழியே ..உன்
கதவுகளைச் சாத்து
நான்
கனவுகள் பின்னவேண்டும்

ஆழ்மனப் பறவையின்
சிறகுகளே தூரிகையாகி
ஆயிரம் சித்திரங்கள்
எழுதவேண்டும்

*
அந்த
வெள்ளைச் சிறுமியின்
தோளைப் பற்றியிருக்கும்
நீக்ரோ குழந்தையின்
வெள்ளரிச் சிரிப்பு...

*
பதுங்கி ..பாயும்
ஆப்பிரிக்க ஈழப் புலிகள்
சமரச தெருக்களில்
உலாவும் காட்சி..

அடிமைச் சிறைகளில்
விலங்குகள் பூட்டிய
ஆயிரம் உணர்ச்சிகளுக்கும்
சிறகு முளைத்தல்

*
தேவனின் வீடுகளையெல்லாம்
சாத்திவிட்டு
கிழக்கின் வாசலை
கண்விழித்து பார்த்திருக்கும்
"மத"யானைகள் ..

*
கடல் கல்லறையைத்
தேடி ஓடாமல்
நாடுகளின் நரம்புகளாய்
நடக்கும் நதிகள்..

*
"ஈர நினைவுகளில்
எல்லைக் கோடுகளை
அழிப்போம்..
ராணுவச் செலவுகளின்
மேடுகளைத் தகர்த்து
பசி வயிறுகளின்
பள்ளங்களை நிரைப்பொம்"

என்னும் குரலில்
உலகத் தலைவர்கள்
ஒன்று கூடி
ஒரு பூந்தோட்டத்துப்
புல்வெளியில்
சிலிர்க்கும் .அழகு..

*
பொட்டல் வெளியெல்லாம்
மரக் கன்றுகள்....எரியும்
பூமித்தாயின் வயிற்றுக்கு
மழைக் கிணறுகள்..

*
இப்படி ..இப்படி..
இன்னும்.. இன்னும்..
ஆயிரம் சித்திரங்கள்
எழுத வேண்டும்

காலை விடியலில்
காற்று வந்து
காதோடு
சொல்ல வேண்டும் ..

"சேதி தெரியுமா
சின்னக் கவியே..
உன் சித்திரங்கள் யாவுமே
நிஜமாய் பேசுகின்றன
இந்தச்
சுத்தமான புலரலில்.."

விழியே ..உன்
கதவுகளைச் சாத்து
நான்
கனவுகள் பின்னவேண்டும் (1987)

('சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள" என்ற எமது முதல் கன்னி முயற்சி நூலிலிருந்து)

*

(இக்கவிதை பற்றி கவியரசு. நா.காமராசன் அவர்களின் முன்னுரையிலிருந்து ..)

"நான் கனவுகள் பின்னவேண்டும் என்னும் வரி 'நான் மனக்கனவுகள் பின்னவேண்டும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். "நட்சத்திரம் அட்சதைகள் தூவும்" என்று ஒலிக்கும் திரைப்படப் பாடல் "வானம் நட்சத்திர அட்சதைகள் தூவும்" என்றிருந்தால் சிறப்பு! ஷேக்ச்பியரிடம் கூட இத்தகைய சிறுபிழைகள் பதினொன்று இருப்பதாக ஆங்கில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ""

எழுதியவர் : கவித்தாசபாபதி (16-Jun-15, 1:33 pm)
பார்வை : 131

மேலே