பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வு போட்டி - அவரின் சொந்தங்கள்

சூழலையும் அங்கு படரும் உணர்வுகளையும் படிக்கும் வாசகர்க்கு வருணனைகள், வார்த்தைகளென குலைத்து செய்த எழுத்துக்களின் மூலம் செவிகளின் வழி நுழைத்து மனதால் சுவாசிக்க செய்ய முடியுமென்றால் "அவரின் சொந்தங்கள்" என்ற சிறுகதையின் துவக்க வரிகளும் அதை செய்கிறதென்றே நம்புகிறேன்.

சூரியன் மறையும் பொழுதென சுட்ட தொடங்கி... "இதோ அழுதுவிடுவேன்" என்று வானையும், "இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன" என்று மலரையும் குறிப்பிடும் வரிகள் மனதில் பதிகிறது.

பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதி என்பவர் இரத்த புற்று நோயால் பாதித்து மரணிக்கவிருக்கும் சுழலின் கனத்தை கூட்டுவதாகவும், விளக்குவதாகவும் இவ்வரிகளே அமைகிறது.

கௌசல்யாவை மனைவியென்றும், மஞ்சுளாவை நெருங்கிய தோழி அல்லது முதல் காதல் என்றும் தான் நினைக்க தோன்றுகிறது முதலில் பின்பு அதுவே தொடர்கிறது.

மாரியப்பனின் அறிமுகப்படுத்தும் வரிகளும்...

/// ஞானபாரதிக்கு சகோதரனாகவும்,சமையல்கார னாகவும்,வேலைக்காரனாகவும்.., சில சமயம் தாயுமானவனாகவும் இருப்பவன். ///

என்று சொல்லும் போது இருவருக்குமான மெல்லிய பிணைப்பை சொல்கிறது. ஞானபாரதிக்கு மாரியப்பன் எவ்வளவு முக்கியம் என்பதும் புரிகிறது.

இருபத்தைந்து வயதில் ஞானபாரதியின் முதல் சிறுகதை பிரபல வாரப் பத்திரிகையில் வெளியானதின் வாயிலாக தமிழக அளவில் அவர் அறிமுகமானது என சொல்ல தொடங்கி இதுவரை இரண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் என்று முன்னேறி செல்லும் கதை...

அவரை காண வருபவர்களாய்.....

///ஊர்க்கவுண்டர் ராமசாமியும்,
பறையடிக்கும் சின்னானும்,
தம்பதிகள் சுமித்ராவும்,ஜெயபாலனும்..,
போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் சங்கரய்யா,
அரசியல்வாதி கணேசலிங்கம்,
சிறுமி கல்பனா,
ஆசிரியரிடம் ஓயாமல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ரவி,
பாதிரியார் ஓசேப்பு,
கோபக்காரன் மனோகரன்,
கோடங்கி சிவனான்டி,
பாலியல் தொழிலாளி காமாட்சி,
வாத்தியார் அப்துல்லா///

என பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்பவர்கள், சமுகத்தை சார்ந்தவர்கள், மனநிலை கொண்டவர்களை பட்டியலிடும் போது வெவ்வேறு களங்களில் ஞானபாரதி வாழ்ந்து கடந்து வந்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது..

அதே வேளையில்.... காதல் வளர்த்து கைப்பிடித்த மனைவி வித்யா....

///முதல் பிரசவத்தின்போதே தாயும்,பிள்ளையுமாகப் போய்ச்சேர்ந்தாள். ///

///தனது மனைவியையும்,பிள்ளையையும் பிழைக்கவைக்க முடியாத சோகம் அவர் நெஞ்சை ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்தது.///

இவ்வரிகளிலிருந்து தான் ஞானபாரதியின் மரண அர்த்தம் வீசத் துவங்குகிறது.

///ஊட்டப்பட்ட தண்ணீர் வாயிலிருந்து வழிந்து,மாரியப்பனின் மடியை நனைத்தது..!.. “அய்யா...” மாரியப்பனின் குரல்,அதிர்ச்சியை வெளிப்படுத்தும் பேரோலமாய்.. இடியென அந்தப்பிரதேசத்தையே தாக்கியது.///

இங்கு மனதின் அழுத்தம் உடைபட்டு திணறும்போது..

இறுதியாய் இரண்டே வரிகளில்... ஞானபாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தனிமை, தவிப்பு, ஏக்கம், வெறுமை, ஆசைகள்,ஆவல்களென அனைத்தையும் போட்டு உடைக்கிறார்..

"அதுவரை அந்த அறையிலிருந்த மற்ற அனைவரும் சட்டெனக் காணாமல் போயினர்.!
இனி அவர்கள் எந்தப் பாத்திரமாக,எந்தக் கதையில் வாழ்ந்து வந்தார்களோ..அங்கேயே மீண்டும் சென்றிருக்கலாம்..! "

----------------------------------------------------------------

இது என்னால் எழுதப்பட்டது என்று உறுதியளிக்கிறேன்..

நன்றி..

எழுதியவர் : மணிமேகலை (16-Jun-15, 2:03 pm)
பார்வை : 155

மேலே