ஊதா நிறத்தில் எனது உடல்
அந்தியின் கிரணங்கள்
கரையும் வேளையில்
வண்டல் நிறத்தில் இருக்கிறது
எனது உடல்.
புழுதி படிந்த என்னை
வெளிறிய பூக்களின் நெடி
நிரப்பித் திரிய...
ஊதா நிற ஆடையாய்
என் மேல் கவிழ்கிறது இரவு.
துர்க்குணத்தின் திரவத்தை
அருந்திய பின்...
எனக்கும் முன்னால் இருக்கும்
அடுத்த அடியை நடக்க இயலாமல்..
விடுபட்ட தக்கையாகி...
பின்னோக்கியே நடக்கிறது கால்கள்.
விடுதலையின் அடிக்குறிப்பை
எனது ஒழுங்கினின்று
பிரித்து வாசிக்கும் திரவம்...
தகர்த்து விடுகிறது மனதின் நல் சுவர்களை.
காலத்தின் கலங்கிய குட்டைகளில்
விலங்குகளோடு பயணிக்கும் என்னை
வெப்ப அலைகளால் போர்த்தியபடி
சொட்டு...சொட்டாய்...
எனக்குள் விழுகிறது விஷம்.