அன்பு பேருந்தே

எந்த கலவரமானலும்
முதல்கல் முதல்அடியை
தலையில் வாங்கும்
என் அன்பு பேருந்தே.!

எத்தனை அனுபவம் உன்னோடு

மக்களுக்காக அதிகமாக
தீக்குளிப்பதும் நீதான்

உன்னோடு போகையிலே
பட்டுபோன மரங்களும்
என்னோடு ஓடிவரும்

ஏழை மக்கள்
போட்டிபோடும்
ஒரே இருக்கை
உன் ஜன்னல்ஓரமே

அன்னை மடிக்கு பிறகு
உன் மடியில்
தூங்குவதே சொர்க்கம்

கோடிஸ்வரனும் உன்னுள்
சில்லறை வியாபாரியே.!

சிலநேரம் உன்னுள்
மொத்த தென்றலையும்
அள்ளிக்கொடுப்பாய்

சிலநேரம் மொத்த
ஆக்ஸிஜனையும்
அள்ளிஎடுப்பாய்

விசில் சத்தமே
உனக்கு குயில்பாட்டு

உன்னோடு
செல்கையிலே
இளையராஜாவின் இசை
இன்னும் ஒருதுளி இனிக்கிறது

பொதுஇடத்தில் புகைபிடிப்பவனும்
உன்னிடத்தில் அடங்கிவருவான்

சாதி சமயம்
ஏழை பணக்காரன்
பாகுபாடின்றி பயணிப்பவன் நீ

ஊனமுற்றோர்க்கென உன்
மனதில் தனியிடமுண்டு

உன் படிகளை பங்குபோட்டு
தவழ்ந்து விளையாடி
உயிரைவிட்டோர் பலர்

நீ ஏழையின் கதவு
என்பதால் திருடர்களும்
உன்னுள் வந்து போவார்கள்

காதலிக்காக காத்திருந்தோரைவிட
உனக்காக காத்திருந்தோரே பலர்

இப்படி எத்தனை அனுபவங்கள்....

எழுதியவர் : பார்த்திப மணி (23-Jun-15, 11:53 pm)
பார்வை : 1228

மேலே