27-06-2015 கவிஞனும் கற்பனைத் திறனும் --03
பதிவு 2-இல் மூவகையான கற்பனைத் திறங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவில் இருக்கலாம். அதில் இரண்டாவது வகையான ஆழ்கற்பனை என்பது ‘பொருள்களின் இயல்புகளை ஒருவன் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, பின்னர் பகுத்துப் பகுத்துக் கூர்ந்து நோக்குவதன் மூலம் வெளிப்படுவது’, ‘பொருள்களின் உள்ளார்ந்த இயல்புகளைப் பற்றிக் கொண்டு, காரணகாரியத் தொடர்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடாது, உள்ளுணர்வின் எழுச்சிக் குறிப்பாக, அதனை வெளிக்கொணர முயலுவது’ என்று சொல்லப்படுகின்றது. இக் கற்பனையின் செயற்பாடு முடிவான உண்மையை உள்ளுணர்வால் கண்டறியும் முயற்சியைக் கொடுப்பது என்றும் சொல்லலாம். தானே எதையும் அறியும் நோக்கினை ஊக்குவிப்பது என்றும் கொள்ளலாம்.
ஆற்றுப்,பெருக்கினைக் கம்பன் இப்படிப் பாடுகிறான் :
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள்,ஈ தென்னத்
தொல்லையில் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே!..(3)
வெளிப் பார்வைக்குக் கம்பன் நீர் பரத்தலைப் பற்றிப் பேசுவதாகத் தான் தோன்றும் இதில், உள்ளார்ந்த ஆழ்நிலையில் சமயங்களின் அடிப்படை ஒருமை பேசப்படுவதை உய்த்தறியலாம்.
இப்பாடலின் முழுப்பொருளினை நோக்குவோமானால் :
இமய மலையில் தோன்றி அங்கிருந்து வந்து,கடலிலே கலந்துவிட்ட சரயுவின்
வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும், சொல்லுதற்கரிய பரம் பொருள் (போன்றது) இவ்வெள்ளம்’ என்று கூறுவதற்கு ஏற்றபடி, ஆதிமுதலில் ஒன்றாகவே இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களிலெல்லாம், விரிந்த ஆராய்ச்சியுடைய பல்வேறு சமயவாதிகள்,விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரவியது என்பதாகும்.
பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய, தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம, ரூப பேதங்களாக விளகங்குகிறது; அதுபோலவே வெள்ளநீரும் ஏரி, குளம், கால்வாய் போன்ற பல இடங்களில் பல
பெயர்களால் பரந்து செல்கிறது என்று கம்பன் ஆழ் நிலையில் சமயங்களின் அடிப்படை ஒருமையைப் பேசுகிறான் என்பது வெள்ளிடை மலையன்றோ?
இதுவும் கவிஞனின் கற்பனைத்திறனேயல்லவா...!
(தொடரலாம்)