உப்பில்லாக் கவிதை
அப்பாக்களைப் போலவே
நாங்களும் இருந்துவிடுவதென்று
அப்பாக்களைப் போலவே
தீர்மானித்திருந்தோம்...
தீர்மானம் நிறைவேற்றப்பட
முறுக்கும் லட்டும்
பரிமாறிக்கொண்ட
மூன்றாம் வகுப்பு வயதில்
தீர்மானத்தின் அர்த்தமென்பது தெரியாது....
எனக்கு பாத்திமாவிடம்
பேசிக்கொண்டிருப்பதைப்போலவே
அவனுக்கும் வசந்தியின்
பின்னால் சைக்கிளில் தொடர்வது
பிடித்த ....பதின்வயது நாட்கள்
கோலாகலமானவை....
சைவாள் ஓட்டலில்
சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருநாளில்
சட்டினியில் உப்பில்லையென
நான் சொல்லிவைக்க....
அவனும் மென்றுகொண்டே
ஆமோதித்திருந்தான்...
புகார்கள் அனைவராலும்
வழி மொழியப்பட்டு...
உப்பும் சேர்த்தாகிவிட்டது.....
நான்.... வெறியனுமல்ல...
அவன்... தீவிரவாதியுமல்ல......