நேசம் வந்தால் நேசிப்போம்
................................................................................................................................................................................................
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.
உனக்குத்
தாமரை பிடிக்கும் என்பதற்காக
என்னைத் தாமரையாக்கி விடாதே;
எனக்கு மல்லிகை பிடிக்கும் என்பதற்காக
நீயும் மல்லிகையாக மாறாதே;
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.
கழுகின் சிறகை வெட்டிக்
கதவடைத்து
‘ஆகா, என் கழுகு
என்னிடமே இருக்கிறது’ என்று
எண்ணிக் கொள்வதில் என்ன பெருமை?
அது
வெண்பரிதி மறையும் சிறகுகளும்
வேடர்கள் மிரளும் வலிமையும்
கொண்டான பிறகும்
உன்னைத் தேடி வந்து
தோளில் அமருமானால்
அதுவன்றோ பெருமை?
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.
பிடி இறுகாத போதும்
விலகாத நேசம்,
முடி அவிழாத போதும்
அசையாத நம்பிக்கை,
கால தூரத்தால் கலங்காத புரிதல்-
இவை போதும்.
நிபந்தனையற்று
நிஜத்தை ஒற்றி
உதவிக்கு உதவி
உள்ளத்தால் நெருங்கி.....
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.