பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் - 2

வெளியே சென்று விட்டு
வீடு திரும்பிய ஒரு பின்னிரவில்
பூட்டியிருந்த கதவை திறக்க
சாவியை தேடிய சமயத்தில்
சிரித்துக் கொண்டே மீண்டும் வெளியே வந்தான்
எனக்குள் இருந்து அவன்...
யார் பூட்டியது இந்த கதவை?
என்று கேட்டான் அவன்..
நான் என்றேன்
சாவியை கையில் எடுத்தப் படி...
பூட்டியது நீ என்றால்
பிறகு எதற்கு சாவியை தேடுகிறாய்? என்றான்...
கண்களில் பெருகிய கோபத்தோடு
கதவை திறந்து வீட்டிற்குள் வந்து
கதவை மீண்டும் மூடி விட்டு
அவனிடம் கேட்டேன்
பித்தனே...
சாவி இல்லாமல் எதை திறக்க முடியுமென்றேன்
சத்தமாக...
மனதை திறக்க சாவி தேவை படுவதில்லை
என்றான் அமைதியாக...
அவன் மேலும் கேட்டான்..
எதற்காக கதவை மூடி விட்டு சென்றாய்?
இது என்ன குருட்டுக் கேள்வி?
வெளியே செல்லும்போது
வீட்டுக் கதவை மூடி விட்டுத்தானே செல்ல வேண்டும் என்றேன்
எல்லாம் தெரிந்த மாதிரி...
இப்போதுதான் உள்ளே வந்து விட்டாயே
பிறகு எதற்கு மூடுகிறாய் என்றான் அவன்
அனைத்தும் அறிந்த மாதிரி...
என்னைக் கேட்காமல்
எதுவும் உள்ளே வரக் கூடாது
என்பதற்காகத்தான் கதவை மூடினேன் என்றேன்
ஏளனமாக...
கதவை மூடினாலும்
காற்று உள்ளே வர
உன் அனுமதியை கேட்டுக் கொண்டிருப்பதில்லை
என்றான் அவன் நிதானமாக...
அவன் மேலும் சொன்னான்...
மூடுவதும் திறப்பதுமாக
நீ இருந்தாலும்
உன்னால் எந்த கதவும்
மூடப் படுவதுமில்லை திறக்கப் படுவதுமில்லை
முட்டாளே...
இது என் பூட்டு
இது என் சாவி
இது என் கதவு
என்னால் பூட்டி வைக்க முடியும் என்றேன்
பொறுமை இழந்து...
உன் மரணமெனும் கதவு
திறந்தேதான் இருக்கும்
அதை உன்னால் பூட்டி வைக்க முடியாது
என்றான் பொறுமையாக...
********************* ஜின்னா *********************
அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)