ஒரு கவிதைக்குப் பின்னால்

ஒரு கவிதைக்குப் பின்னால்
========================
குவளை அமிழ்த்திய வாளிநீரில்
குமிழி எழும்பும் சத்தம்போல்
விழுங்கிய வார்த்தைகளாக
இருந்திருக்கக் கூடும்
அவளைச் சுற்றியுள்ள
அன்றைய ஆராவாரங்கள் ம்ம்ம்ம்
சுரம் தாழ்ந்துகொண்டிருந்த
அவளின் அசையாத
விழிவெண்படலத்தின் முன்னாலும்
விழிவில்லையின் முன்னாலும்
நிகழவிருந்த
முடிச்சுகளுக்குப்பின்னால்
பிரமாணங்கள் செய்துகொடுத்த கரங்களில்
இறுக்கம் பிடிவிட்டிருந்தது
நீலத்தாமரை இதழ்கள்
ஒன்றையொன்று ஒதுங்கியிருப்பதைப்போல
பற்களில் இடைவெளி விட்டும்
அப்பொழுதும் அழகாய் சிரித்திருந்தாள்
வெளுப்பங்காலத்து
வெண்பனியின் கனவொன்றில்
அன்று பூத்த வசந்தங்களெல்லாம்
இலைச் சொரிந்து
காற்றடித்துக் கொண்டு போனதைப்போல
அவளின் இருட்டறைக்குள்
முடக்கிவைத்த
எல்லா பிரியங்களும்
பாதையின்றி தரித்த மணற்பாலையில்
சில்லுகள் சுமந்த
ஒற்றை மரமொன்று
சிவந்த ஜுவாலையாய்
அவளோடு சிதைந்து கொண்டிருக்க
பாதங்கள் பூமி படாது
சிறகுகள் புடைத்து
மீண்டும் புதிதாய் முளைத்துக் கொண்டிருந்தாள்
பின்பொருநாள்
மும்பரத்தின் நாலாபுற சுவர்களினோடு
முணுமுணுத்துத் தீர்த்த
அரவங்களின் ஓய்வுக்குப் பின்னாலுள்ள
பரந்த சாந்திரபிரகாச நிசியில்
தனிமையில்
சிறுநீர்க்கழிக்க வேண்டுமாய்த் தோன்றிற்று
புகைவாசம் நிரம்பி
கரித்துக்கொண்டிருந்த நெஞ்சுகுழிக்குக்கீழே
வேறெங்கும் தப்பிக்காதவாறு
பிடிவாத கயிறுகட்டிக் காத்திருந்த
அடிவயிறு புரளும் ஏங்கல்கள்
நெற்றிப் பொட்டிற்கும்
வெளியேற சிரமிக்கும்
சளி அடைத்த நாசிக்கும் இடையில்
இடம் பெயர்ந்திருந்தன
ஆனால்
சங்கு கர்ஜித்து
கண்ணீர்ப் பொட்டித் தெறிக்க
இடம் கொடுக்காத
என் மிழிகள் மாத்திரம்
எதையோ வெறித்துக் கொண்டிருந்தன
அனுசரன்