நிலாப்பெண்ணும் நிஜங்களும்

மின்மினிகள் கோர்த்து மாலை செய்தேன்
வெண்மதி அவளுக்கு சூடிடவே
நான் கண்ட நங்கை
முகம் மறைத்து
தேய்பிறையாக காட்சி தந்தாள் .

மாலையிடும் வேளை வருமென்று
விண்மீன்கள் இடத்தில் சரணடைந்தேன் ..
வேதனை சற்று மிகுதியாக
தேவியை தேடி நான் பறந்தேன் .

கலைந்திடும் மேகங்கள் கூடி வந்து
கைகட்டி வேடிக்கை பார்த்ததுவே
ஆதவன் செய்த சதி இதென்று
அலைகடல் நுரைகள் விம்மியதே ..

வீசிடும் தென்றலும் விரைந்து வந்து
மலரிடம் சேதி சொல்லியதே .!
மலர்செடி சுமந்த வேர்கள் மெல்ல வினாக்கள் தொடுத்தன மண்ணிடமே.

பொறுமை காத்த பூமிமாதா
கோபத்தின் மிகுதியில் விடையளித்தாள்.
நேர்கோட்டில் பயணிக்கும் முறைசொல்லி
நிழலாகி நான் மறைத்தேன்
வெண் நிலாப்பெண்ணை .
அவள்
நெஞ்சம் கவர்ந்தவன் நேரில் வர
தஞ்சம் புகுந்திட்டாள் என் நிழல்மறைவில்.

கரைந்து அவளும் தேயவில்லை
கதிரவன் சதி செய்ய தேவையில்லை
கன்னி அவளிடம் களங்கமில்லை
சுழல்கின்ற நான்
பொய்யுரைக்க தேவையில்லை .

விளக்கம்பெற்ற வேர்கள் எல்லாம்
விளங்கிக்கொண்டது புவியியலை
வெண்ணிலா முழுமுகம்
காணவென்று
எண்ணிகழித்தன நாழிகையை ..!!!

எழுதியவர் : கயல்விழி (1-Jul-15, 10:44 am)
பார்வை : 258

மேலே