அரங்கேற்றவேளை - மீள் - 2012
எழுதியவர் : அனுசரன்
நாள் : 15-Oct-12, 9:36 pm
அரங்கேற்றவேளை
==================
மறைந்திருக்கும்
வார்த்தைகளுக்குள்
ஒளிந்திருக்கிறது
சொல்லப்படாத வெட்கம்
இதயத்தில்
முதல் துளி துளிர்ந்தபோதுதான்
இல்லாத மூட நம்பிக்கைகளின்மேலே
இறுக்கங் கண்டிருப்போம்
இரண்டில் ஒரு விரல் தொடுவது முதல்
இரு கண்களில் ஏதோ ஒன்று துடிப்பதுவரை
கொஞ்சம் கூட
கண்டுக்கொள்ளாமல்
அனிச்சை ஊடுருவுகிற செயல்களால்
ஆண்மை உரைக்கும்
மயிர்க்காடுகளில்
அடர்த்தி கூடிக்காணும்
அன்றுவரை
சொல்லப்படாத பொய்களுக்கு
கைக்கால்கள் முளைத்து
அவை கவிதைகளாகியிருக்கும்
பார்வையையும் புன்னகையையும்
புதுமொழிகளாக்கி
அதில் நாம் அகராதியாகியிருப்போம்
எத்தனை மண்ணிட்டு மூடியும்
ஓயாது பெய்யும் நினைவுச்சாரல்கள்
நமக்குள் இருப்பதை
அவிழ்த்துக்கொண்டே இருக்கும்
விரிந்தும் விரியாத மொட்டுபோல
வெட்கம் பூசிவரும்
கல்லூரி சாலையின் கனவென்றால்
யாருக்குத்தான் பிடிக்காது
எதிராளிகள் எல்லாம்
சிறு குழந்தைகளே ஆவார்கள் அங்கே
படுக்கை நனைத்த கனவுகளில்
கரைப்புரண்டோடிய
சினிமா நாயகிகளுக்கு
அன்றிலிருந்துதான்
விடுதலை கிடைத்திருக்கும்போல்
அறையின் தனிமைகளுக்கு
நினைவுகளே போர்வையாகிவிடும் அதற்குப்பின்னால்
அனுசரன்