காற்றின் கவிதைகள்

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப்புரளும் அலையாவும்
****நுரைப்பூவாய் மொழியெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!