இனம்

பேருந்தில்
எனது
பக்கத்து இருக்கையைப்
பகிர்ந்து கொள்ளவரும்
அவன்
நல்லவேளை
இரட்டை நாடியில்லை.
கோயம்பேடு
முகப்பு உணவகங்களில்
ஐம்பது ரூபாய்க்கு
ஒரு பிளேட்
சாம்பார் சாதம்
சொல்லும் ஜாதியென்று
பார்த்தவுடன் தெரிகிறது.
எங்கள்
இரண்டு இருக்கைகளுக்கு
இடையேயான
ஒற்றைக் கைப்பிடியை
எனக்கும் கொஞ்சம்
விட்டுதருவானென்று
நம்புகிறேன்.
நடத்துனரிடம்
விசாரித்து விட்டு
மறுநாள் காலை
ஆறுமணிக்கு
வந்து சேர்வதாய்ச்சொல்கிறான்
அலைபேசியில்.
மறுமுனையில்
அவன் அம்மாவாய்
இருக்கவேண்டும்.
இனி
அவனைப்பார்த்துப்
புன்னகைக்கலாம்
என்று திரும்புகிறேன்
இனி
அவனைப்பார்த்துப்
புன்னகைக்கலாம்
என்று திரும்புகிறான்
அவனும்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (5-Jul-15, 4:30 pm)
Tanglish : inam
பார்வை : 209

மேலே