யாம் புரிவதும் பணியே - ராம்வசந்த்

இதோ இந்த பூமி சூல்கொண்ட காலங்கள்
நானறிவேன் பச்சைப் பசேலென இருக்கும்
பின் மஞ்சள் உருமாறி நெற்கதிர்களை சுமக்கையில்
நிறைமாத கர்ப்பிணியின் அழகொளிரும்
இந்த பூமி முப்போகம் தந்ததாக வரலாறு சொல்கிறது
அரசாளும் வேந்தர்களும் இந்த பூமிக்காரனின்
குடையின் கீழ் இருப்பரென புலவர்கள் மொழிந்தனர்
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரு நாடென
இங்கொருவன் குதித்தான் வாடியபோது வாடினான் வேறொருவன்
ஜெய்கிஸான் என இந்த பூமிமார்க்கம் அறிந்தவர் ஓதினர்
எங்கள் ஜீவநதி இதன் வரப்புகளில்தான் ஓடியது
இங்குள்ள ஏரிகளிலே எம் பால்யங்கள் முழுமையடைந்தன
இந்த பூமிஞானம் அடைந்தவரையே பெண்டீர் மணந்தனர்
அந்திகளில் காதலும் விழாக்களில் வீரமும் இங்கேதான் நடந்தன
எம் பாட்டன் இறந்தபோது எம் பரம்பரை மானெமென
எங்கள் கிழவி அவள் தலைமுறைகளிடம்
இதைத்தான் தூக்கிக் கொடுத்தாள்.
இப்போது அராசங்க வாகனங்களில் வந்து அதை கேட்கிறீர்கள்...
நாட்டில் வேலை வாய்ப்பு பெருகுமாம் .!
எனில் இதுநாள்வரை நாங்கள் இங்கு __யா பிடுங்கிக் கொண்டிருந்தோம்.

எழுதியவர் : ராம்வசந்த் (5-Jul-15, 3:05 pm)
பார்வை : 298

மேலே