கேள்வி

மௌனத்தின் வெண்பொழுதுகளின்
குறுக்கே
சந்தேகப் பொன்மான் குதிக்க
நிலத்தில் நீரில்
இயந்குவனனைத்திலும
சீதை தன் கனத்த
சகல வினாக்களை
தனக்குத் தானே எழுப்புகிறார். ..

சேது அணையின்
பெரும் பாறைகளின் மீது
எதிரொலிக்கிற அவள் வினா
அம்பு மழை செறிந்து
பேராசையென
ஒவ்வொரு இராவணத் தலையிலும்
பத்துப்பத்தாய் வெடித்து சிதறி
அக்னியின் நெற்றியைப் பிளந்து
அக் கேள்வியை எழுப்புகிறது. ..

மீண்டும் காயம்பட்ட பூமியில்
வேரூன்றி இறங்கி
பூத்துப் பொழியும்
வாடாத அசோகவனத்தில்
அனுமன் வைத்த நெருப்பென
கொதிக்கிறதந்தக் கேள்வி
உடலால் எரிந்து
கற்பினைப் பறைசாற்றி
உள்ளத்தால் இறந்து கொண்டிருக்கும்
சீதை யிலிருந்து
கடைசிக் கேள்வியொன்று
உயிரில் முளைவிடுகிறது
"ராமன் எது செய்து
தனது கற்பினை நிரூபிப்பான்".

எழுதியவர் : பாலா (5-Jul-15, 7:22 pm)
Tanglish : kelvi
பார்வை : 128

மேலே