கொலையாளி-2 கிரைம் சிறுகதை

................................................................................................................................................................................................

தொழிலதிபர் சோமசுந்தரத்தைத் தெரியுமா? அவரைத் தெரியாதவர் சென்னை நகரத்திலேயே கிடையாது. பல கோடி ரூபாய் சொத்துக்காரர். அவருக்கு இரண்டு மகள்கள். இருவரும் நல்லபடியாக கல்யாணம் காட்சி என்றாகி விட்டனர்; ஒரே மகன் மோகன்.

மோகனை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தார் சோமசுந்தரம். படிப்போடு போதைப் பழக்கமும் தொற்றிக் கொண்டது. வெளிநாடும் வேண்டாம்,ஒன்றும் வேண்டாம் என்று அவனை மீட்டு மும்பையில் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்து விட்டார். பாவம், அப்பாவின் சொத்து இப்படியெல்லாம் கரைய வேண்டாம்.

ஒரு வருடம் இரண்டு வருடமல்ல – கிட்டத்தட்ட ஏழெட்டு வருடம் அவன் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டே படிப்பையும் முடித்தான். இப்போது ஆறு மாதமாக அவன் நல்ல மனநலத்தோடு இருக்கிறான் என்று டாக்டர்களின் சான்றிதழ் கிடைத்து விட்டது. வயதும் இருபத்தி நான்கு ஆகி விட்டதால் பையனை வரவழைத்து சொத்துக்களை அவன் பெயருக்கு எழுதி வைக்க சோமசுந்தரம் விரும்பினார். இதற்காக அவர் பெரிய மனிதர்களைக் கூட்டி ஒரு விழாவையும் ஏற்பாடு செய்தார்.


சோமசுந்தரத்தின் குடும்ப டாக்டர் கைலாச மூர்த்தி மோகனை முன்னரே சோதித்து தம்முடைய திருப்திக்காக சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்திருந்தார். முடிவு சாதகமாகவே இருந்தது. நண்பர் சோமசுந்தரத்தின் மகன் நல்லபடி கரையேறி விட்டான்!


சோமசுந்தரம் அதிகப்படி மகிழ்ச்சியில் இருந்தார். கைலாச மூர்த்தியையும் விழாவுக்கு அழைத்திருந்தார். விழாவுக்கு உறவுக்காரர்கள் அனைவரும் வந்து விட்டனர். சோமசுந்தரத்தின் மகள்கள் புகுந்த வீடு பந்தம் சூழ வந்திருந்தனர். சோமசுந்தரத்தின் அண்ணன் தனசேகரும் தம்பி கஜபதியும் அவரவர் குடும்பத்தினரோடு வந்து விட்டனர். அக்காள் மீனாட்சி, தன் கணவருடன் வளைய வந்தாள். இவர்களது ஒரே மகன் சஞ்சய் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்தான். விடுப்பு கிடைக்காததால் அவன் மட்டும் வரவில்லை. விழா ஏற்பாடுகளை சோமசுந்தரத்தின் அக்காள் கணவர் விஜயகுமார் முன்னிருந்து நடத்திக் கொண்டிருந்தார்.


கைலாச மூர்த்தி மாத்திரம் தனியாக அந்த விழாவுக்குப் போயிருந்தால் அந்த விபரீதம் நடந்தேறாமல் இருந்திருக்கும்..! ! !


கைலாச மூர்த்தி அப்போதுதான் மும்பையிலிருந்து வந்திருந்த தம்முடைய இன்னொரு மருத்துவ நண்பர் உமேஸ் வர்மாவை அந்த விழாவுக்கு அழைத்துக் கொண்டு போனார். உமேஸ் வர்மா ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்.


“சொரூபா” ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விழா ஏற்பாடாகி இருந்தது. கைலாச மூர்த்தியையும் உமேஸ் வர்மாவையும் விஜயகுமார் வரவேற்று ஒரு ஆடம்பர அறையில் தங்க வைத்தார். இன்னும் சற்று நேரத்தில் விழா தொடங்கி விடுமென்றும் அதற்குள் அவர்கள் ஃபிரெஷ் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து விட்டுச் சென்று விட்டார்.

சில நிமிடங்களில் ஹோட்டல் சிப்பந்தி ஒருவன் கைலாச மூர்த்தியை சந்தித்தான்.

மிஸ் பத்மா விஸ்வநாதன் என்றொரு பெண்மணி கைலாச மூர்த்தியிடம் ஏதோ பேச வேண்டுமாம்.

பொதுவாக டாக்டர்கள் விழாவுக்குப் போனால் யாரேனும் ஒருவருக்கு அறிவுத்தாகம் எடுத்து இலவச கன்சல்டேசனுக்கு அழைத்து விடுவார்கள். எங்க ஒண்ணு விட்ட சித்தப்பாவோட நாத்தனாரோட.. தம்பி பையனுக்கு இன்ன பிரசினை என்று பேச்சுத் தொடங்கும். உண்மையில் அந்த ஒண்ணு விட்ட எக்ஸெட்ரா, அழைத்த ஆளாகத்தான் இருப்பான்....!

கைலாச மூர்த்திக்கு இந்த அணுகுமுறை நன்கு தெரியுமாதலால் உள்ளுக்குத் திரும்பி, “ உமேஸ், இதோ இப்ப வந்துடறேன் ”, என்று கூறிக் கொண்டு வரவேற்பறைக்குப் போனார்.

பத்மா விஸ்வநாதன் ஒய்யாரமாக, அழகாகத் தெரிந்தாள். அவள் மேனி எது உடை எது என்று கண்டு பிடிக்க முடியாத வகையில் சந்தன நிறத்தில் சிக்கென்று இருந்தது ஆடை. கைலாச மூர்த்தியைப் பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து கைகூப்பி வணங்கினாள். “ வாங்க டாக்டர் ” என்று பக்கத்தில் இடம் கொடுத்தாள். அப்படியே தூக்கியது வாசனை...


கைலாச மூர்த்தி எதிர்பார்த்ததைப் போலவே இவளும் எங்க பெரியப்பா... என்றுதான் தொடங்கினாள்..... கைலாச மூர்த்தி ஒரு புன்னகையைத் தவழ விட்டார்.

அதற்குள் இருவருக்கும் சூப் வந்தது. வெளிர் மஞ்சள் வெஜிடபிள் சூப்...

கன்சல்டேசன் முடிந்து பேச்சு அரசியல், சினிமா என்று சுற்றி வந்தது. நேரம் போனதே தெரியவில்லை...! விழாவும் தொடங்குகிற வழியாய் இல்லை..!

திடீரென்று ஏக பரபரப்பு....! ! ! !

ரூம்பாய் ஒருத்தன் தலை தெறிக்க ஓடி வந்தான். “ டாக்டர் சார், டாக்டர் சார்...! ! உங்க ரூமில இருக்கிற டாக்டர் என்னவோ போல இருக்கார்... ஓடி வாங்க...! ! ! ”

கைலாச மூர்த்தி விரைந்த போது மூச்சுத் திணறலின் உச்ச கட்டத்தில் போராடிக் கொண்டிருந்த உமேஸ் தமது கடைசி மூச்சை நழுவ விட்டார்...! ! !

கண் முன்னே நண்பன் மறைந்த அதிர்ச்சி..! ! ! கைலாச மூர்த்தி மணி பார்த்தார். நண்பனை மறந்து விட்டு சரியாக ஐம்பத்திரெண்டு நிமிஷம் யாரோ பெண்ணோடு என்னை மறந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறேன்..! ! !

அதிர்ச்சி கோபமாக மாறியது ! !

அவர் கைகள் தாமாக இயங்கி போலிசுக்கு ஃபோன் செய்தன. பிரைவேட் டிடெக்டிவ் வசந்தகுமாரையும் அழைத்தன.

எங்கே அந்தப் பெண்ணைக் காணோம்??

சோமசுந்தரமும் அவரது அக்காள் கணவர் விஜயகுமாரும் பதறியடித்து ஓடி வந்தனர்.

“ எ... எ... எப்படி இறந்தார் டாக்டர்? ”

“ ஏதோ அலர்ஜியாகி இருக்கு.. பக்கத்துல சூப் குடிச்ச கப் இருக்கு..! அதுல கொஞ்சம் சூப்பும் இருக்கு..! இந்த சூப்பிலிருக்கிற ஏதோ பொருள் இவருக்கு அலர்ஜியாகி இருக்கு...! ”

“ ஐயையோ? ரொம்ப வருத்தமா இருக்கு, டாக்டர்..! ” சோமசுந்தரம் கையைப் பிசைந்தார்.


விஜயகுமார் டாக்டரை தனியாக அழைத்தார்..

“ டாக்டர், உங்க நண்பருக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது ரொம்ப வருத்தமா இருக்கு, இது விபத்தாகவும் இருக்கலாம் இல்லையா? போலிஸ் வரட்டும், அதப் பத்தி ஒண்ணுமில்லே; ஒரு அரை மணி நேரத்துக்கு விசாரணையைத் தள்ளி வைக்கலாமில்லையா? ஏன்னா நம்ம சோமசுந்தரத்துக்கு இந்த விழா ரொம்ப முக்கியம்.. கொஞ்சம் கருணை காட்டுங்க... “

இதே வேண்டுதலை சோமசுந்தரத்தின் அண்ணனும் தம்பியும் கூட முன் வைத்தனர். தம்பி கஜபதி காலிலேயே விழுந்து விட்டார். கைலாச மூர்த்தி யோசிப்பதற்குள் தனியார் துப்பறியும் நிபுணன் வசந்தகுமார் வந்து விட்டான்..!

இந்த வசந்தகுமார் கொஞ்சம் குட்டையாக கோதுமை நிறத்திலிருந்தான். மூக்குக்கண்ணாடி மூக்கின் மேல் இல்லாமல் சட்டையில் தொத்திக் கொண்டிருந்தது.

“ முதல்ல எல்லா கேட் ” டையும் இழுத்துச் சாத்துங்க...! ஒருத்தரும் வெளியே போகக் கூடாது..! ”

விஜயகுமாரை பேசவே விடவில்லை அவன்..!

“ அப்ப இந்த சூப்புலதான் மிஸ்டேக்கா ? ” சூப்பை வழித்தெடுத்து திரும்ப ஊற்றினான். தடயவியல் துறைக்கு அனுப்பச் செய்தான். அதற்குள் போலிஸ் வந்தது.

“ வசந்த், ” கைலாச மூர்த்தி நெற்றியை தேய்த்தபடி அழைத்தார். “ எங்களுக்கும் சூப் வந்தது - வெளிர் மஞ்சள் நிற வெஜிடபிள் சூப்..! ஆனா இந்த சூப் பச்சை நிறத்துல இருக்கே? ”

ஹோட்டல் பணியாள் வந்தான், “ சார்...! இது கீரை போட்ட காளான் சூப்.. இது எங்க ஹோட்டல் அயிட்டம் கிடையாது. பக்கத்து ஹோட்டல்ல இருந்து வரவழைச்சிருக்காங்க. ”

“ என்னது? இது உங்க ஹோட்டல் அயிட்டம் கிடையாதா? ” ஆச்சரியப்பட்டார் கைலாச மூர்த்தி.

” வரவழைச்சிருக்காங்கன்னா யார் வரவழைச்சது? உமேஸ் கேட்டாரா? ”

இருக்கலாம்.. சரியான பதில் யாருக்கும் தெரியவில்லை..!

“ நீங்க எங்க சார் போயிட்டீங்க? ” வசந்த குமார் கேட்டு விட்டான்.

கைலாச மூர்த்தி பத்மாவை வர்ணிக்க, வசந்த குமார் தன் அலைபேசியில் சேகரித்து வைத்திருந்த படங்களுள் ஒன்றைக் காட்டினான், “ இவளா? ”

பத்மா ஒரு குட் டைம் கேர்ல். அதாவது..கேளிக்கை மகளிர். விலைமகள்தான். ஆனாலும் ஹெச்ஐவி எய்ட்ஸ் வேகமாகப் பரவி வரும் இக்காலத்தில் மேல் மட்டத்து ஆண்கள் ஆண்-பெண் நெருக்கத்தின் உச்சகட்டத்தை விரும்புவதில்லை. அதற்கேற்றாற் போல் இப்பெண்கள் சிரிக்க சிரிக்கப் பேசி பொழுதை இனிமையாக்குவார்கள். ஒரு செகரெட்டரி செய்கிற அத்தனை அலுவலக வேலையும் கூடச் செய்வார்கள். என்ன, செகரெட்டரிக்கு தனியாக இருக்கை போட வேண்டும். இவர்கள் இருக்கை இல்லாவிட்டால் பாஸின் மடியையே.... சரி, சரி... உண்மையில் பத்மா என்பது அவளுக்கிருக்கும் பத்துப் பதினைந்து பெயர்களுள் ஒன்று. உமேஸை தனிமைப்படுத்த அனுப்பப் பட்டவள். வேலை முடிந்து, போயிருக்கிறாள்.

கைலாச மூர்த்திக்கு அதிர்ச்சியும் வெட்கமும் பிடுங்கித் தின்றன.

“ அப்ப பத்மாவை உடனே பிடிங்க ! ” கைலாச மூர்த்தி கதறினார். “ அவளை அனுப்பி வச்சது யாரு? ”

பத்மாவை மடக்கியது போலிஸ். விக்னேஷ் என்று ஒரு பெயரை அவள் சொன்னாள். அந்த ஹோட்டலிலேயே இரண்டு பேர் விக்னேஷ் என்ற பெயரில் இருந்தனர். ஆனால் அவள் குறிப்பிட்டது அவர்களை அல்ல.

அதே நேரம் பக்கத்து ஹோட்டலில் களேபரம்.

பக்கத்து ஹோட்டல் சர்வர் தன் முதலாளியிடம் உடம்பு சரியில்லையென்று விடுப்பு கேட்டுக் கொண்டிருந்த போது...

திடீரென்று கீழே விழுந்து இறந்து விட்டானாம். அவன் பெயரும் விக்னேஷ்தான்.

வசந்தகுமார் மண்டைக்குள் நிறைய யோசனைகள் ஓடின.

1. பத்மா சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்றால் இது விபத்தல்ல; கொலை..! காளான் உணவு அலர்ஜியாகி இறந்த மாதிரி, அதாவது விபத்து மாதிரி புனையப்பட்ட திட்டமிட்ட கொலை..!

2. உமேஸ் இந்த விழாவுக்கு வர வேண்டியவரே அல்ல. அவர் உள்ளூர் வாசியும் அல்ல. அவரால் யாருக்கு என்ன இடைஞ்சல்?

வசந்த குமார் கைலாச மூர்த்தியிடம் சில விவரங்களைக் கேட்டான்.

தடயவியல் துறையிலிருந்து ரிப்போர்ட் வந்தது. டாக்டர் உமேஸ் சாப்பிட்ட காளான் சூப்பில் ஒரு வேதிப்பொருள் கலந்திருக்கிறது. அந்த வேதிப்பொருள் காளானோடு வினை புரிந்து முழு சூப்பையும் விஷமாக்கி விட்டிருக்கிறது....! ! !

கைலாச மூர்த்தி, போலிசார் சகிதம் பக்கத்து ஹோட்டலுக்கு புறப்பட்டான் வசந்த குமார். உடம்புச் சூடு குறையாமல் பிணமாகி இருந்தான் விக்னேஷ்...! பத்மா அவனைப் பார்த்ததும் கத்தினாள், “இந்தாளுதான் எனக்குப் பணம் கொடுத்து அனுப்பி வச்சார்..” அவன் நகக் கண்களில் பொடியாக ஏதோ தென்பட்டது – வேதிப்பொருள் ! சட்டைப் பாக்கெட்டில் பொட்டலமிருந்தது- உமேஸின் உயிர் பறித்த அதே வேதிப்பொருள்..! ! தோள் பட்டையில் ஊசி குத்திய அடையாளமிருந்தது. சிரிஞ்ச் அவன் சட்டைக்குள் விழுந்து கிடந்தது. அடடா, உமேஸின் உயிர் பறித்த அதே வேதிப்பொருள் இவன் உயிரையும் பறித்திருக்கிறது..! ! பனியனுக்குள் கட்டுக் கட்டாகப் பணமிருந்தது.


காளான் சூப்பை விஷமாக்கி உமேஸுக்கு கொடுத்த பிறகு இவன் தன்னை ஏவிய பிரமுகரைப் பார்க்கப் போயிருக்க வேண்டும்- தன் வேலைக்குப் பணம் வாங்க..! அப்போதே இவனுக்கும் இவன் அறியா வண்ணம் இன்ஜென்ஷன் போடப்பட்டிருக்கிறது. சூப்பில் கலந்து கொடுத்ததால் உமேஸ் இறக்க ஐம்பது நிமிடமாகி இருக்கிறது. நேரிடையாக உடம்பில் கலந்ததால் தலை மறைவாகி விடுமுன்னே இருபது நிமிடத்தில் விக்னேஷ் பிணமாகி விட்டான்...! இவன் உயிரோடிருந்தால் அந்தப் பிரமுகருக்கு ஆபத்தல்லவா?

அதனால் விக்னேஷ் அவுட்..!


“வசந்த், இந்தாங்க, நீங்க கேட்ட விபரம்“ - கைலாசமூர்த்தி தமது டாப்லெட்டை வசந்தகுமாரின் பக்கமாகத் திருப்பினார்.

மனநலக் காப்பகத்திலிருந்து மோகனின் பழைய மெடிக்கல் ரிப்போட்டுகள்- மோகனின் ரத்தத்தில் ஆறு மாதமாக போதை மருந்தின் சுவடில்லை. மோகனின் ரத்த வகை ஏ2பி பாசிட்டிவ்.. ஓகே..

கைலாசமூர்த்தி சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனை... போதை மருந்தின் அளவு.... “என்ன சார் இது? “ வசந்தின் கை ஒரு பரிசோதனை முடிவைச் சுட்டியது.

கைலாச மூர்த்தியின் முகம் இருண்டது.

அடுத்து அவர்கள் பார்த்தது டாக்டர் உமேஸின் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட ஈ மெயில். டாக்டர் உமேஸ் சமீப காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முடித்திருந்த நோயாளிகளின் பட்டியல்- அவர்களின் போட்டோக்களோடு...! பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன், பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் என்று புகைப்படங்கள் வகைப் படுத்தப்பட்டிருந்தன...! அதில் ஒரு கோப்பு கைலாச மூர்த்தியின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தது. அடக்கடவுளே ! ! !


கைலாச மூர்த்தி சோமசுந்தரத்தை கரம் பற்றி தனியே அழைத்துக் கொண்டு போனார்.

அதற்குள் கொண்டாட்ட கோலாகலம் மறைந்து உறவுக்குள்ளே ஒரு விபரீதத்தின் சாயல் புறப்பட்டிருந்தது. வசந்தகுமார் போலிசாரிடம் எதையோ பேசி விட்டு விழா மேடையின் மையத்தில் நின்றான். அப்போதுதான் அங்கு வந்த மோகன் எதுவும் புரியாமல் விஜயகுமாரைப் பார்த்தான்.

“ லேடீஸ் அண்ட் ஜெண்டில் மென்..! நீங்கள் விரும்பியது போல் இந்த விழா இனி நடக்காது. ஏனெனில் இங்கு நிற்கும் இந்த நபர் சோமசுந்தரத்தின் திரண்ட சொத்துக்களுக்கு வாரிசாகத் தகுதி படைத்தவரல்ல...! ”

வசந்தகுமார் அறிவித்தான்.

சோமசுந்தரத்தின் வக்கீல் குறுக்கிட்டார். “ மிஸ்டர் வசந்தகுமார், மோகன் ஒரு காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடந்தவன்தான். இப்ப திருந்திட்டான். மெடிக்கல் ரிப்போர்ட்
இதோ ! ! ”

“ ஆனா இங்கே நிக்கிறவன் மோகனே இல்லே... ”

வசந்தகுமார் இப்படிச் சொன்னதும் நெருப்புப் போல தொற்றியது பரபரப்பு.

வசந்தகுமார் தொடர்ந்தான்:

“ ஆதாரம் இதோ ! ! மோகனோட ரத்த வகை ஏ2பி பாசிட்டிவ்.. இந்த ஆளோட ரத்தம் பி பாசிட்டிவ்..! இது மோகனோட பழைய ரிப்போர்ட். இது டாக்டர் கைலாச மூர்த்தி டெஸ்ட் பண்ணிப் பார்த்த இவனோட ரிப்போர்ட். எல்லோருடைய கவனமும் ரத்தத்துல போதைப்பொருள் அளவு என்னங்கிறதுலதான் இருக்கும்...! டாக்டர் கைலாச மூர்த்தியும் அதத்தான் கவனிச்சார். நான் மூணாம் மனுஷன்கிறதால என் கண்ணுல இந்த வித்தியாசம் பட்டிருக்கு. இவன் மோகனில்ல...! மோகன் மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்திருக்கான்.. ! முகத்தை மாத்த முடிஞ்சவனுக்கு ரத்த வகை மாத்த முடியல... !”

“ அப்ப இவன் யாரு? ”

“ இவன் சஞ்சய்..! ! ! சோமசுந்தரத்தின் அக்காள் மகன். அரபு நாட்டில் வேலை செய்வதாகச் சொல்லப்பட்டவன் ! ! ! ! ”

தன் கூற்றுக்கு ஆதாரமாக டாக்டர் உமேஸின் ஃபைலைக் காட்டினான்.

ஒரு உருவம் மெதுவாக நழுவ ஆரம்பிக்க, போலிஸ் இன்ஸ்பெக்டர் ஒரே அமுக்கு அமுக்கினார்.

அது விஜயகுமார்தான். சோமசுந்தரத்தின் அக்காள் கணவன்.

சொத்துக்கு ஆசைப்பட்டு தனது மகன் சஞ்சய்யை மோகனாக முகத்தை மாற்றி நிறுத்தியிருக்கிறான் விஜயகுமார். அவனது துரதிஷ்டம், மும்பையில் சஞ்சய்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டர் உமேஸ் தற்செயலாக இந்த விழாவுக்கு வந்து விட்டார். இத்தகைய நிலையில் டாக்டர் உமேஸ் சஞ்சய்யை பார்த்தால், பார்த்த மாத்திரத்தில் குட்டு உடைந்து விடும் என்பதால் விக்னேஷை வைத்து உமேஸை தீர்த்துக் கட்டியிருக்கிறார். பிறகு விக்னேஷையும் கொன்றிருக்கிறார்.

“ மோகனை என்ன பண்ணீங்க?” வசந்தகுமார் கேட்டான்.

“ அவன் மும்பையிலிருந்து புறப்பட்ட போதே அவனை கடத்திக்கொண்டு போய்.....கொண்டு போய்.... கொன்னுட்டேன்... !”

அப்படியே நிலை குலைந்தன உறவுகள். நாலா பக்கமும் ஓலமும் முணுமுணுப்பும் எழுந்தது. மோகனின் சகோதரிகள் மூர்ச்சித்தனர். “ அடப்பாவீ..ஈ ஈ..! ! ! ”. என்ற அலறல் புறப்பட்டது மீனாட்சியிடமிருந்து. கணவனின் சட்டையை பற்றிக் குலுக்கியவள் அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள். “ சொத்துக்காக உன் சொந்த மருமகனையே கொன்னுட்டியா? தம்பி கிட்ட நான் என்ன
சொல்லுவேன் ?? ? ”

சோமசுந்தரத்தை கைலாசமூர்த்தியுடன் தனியே அனுப்பி வைத்தது நல்லதாகப் போயிற்று என்று வசந்தகுமார் நினைத்தான்.

அந்த இடத்தை துக்கம் ஆக்கிரமித்தது. ஆளாளுக்குக் காறித் துப்பாத குறையாக விஜயகுமார் குடும்பத்தை விட்டு விலகினர். விஜயகுமாரையும் சஞ்சய்யையும் கை விலங்கிட்டுக் கூட்டிச் சென்றனர் போலிசார்.

வசந்தகுமார் நின்ற இடத்திலிருந்தே கைலாசமூர்த்திக்கு ஃபோன் செய்தான். “ டாக்டர், நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு; உங்களை அப்புறமா பார்க்கிறேன்.... ”

கிளம்பின போது ஹோட்டல் மானேஜர் ஒரு கோப்பை சூப் நீட்டினார். “ சார், ரொம்ப களைப்பா தெரியறீங்க... ஒரு கப் சூப்? ”

மறுக்காமல் வாங்கிக் குடித்து விட்டு, நன்றி சொல்லி புறப்பட்டான் வசந்தகுமார்.

முற்றும்
...............................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (7-Jul-15, 7:22 pm)
பார்வை : 410

மேலே