எதிரி நாடு என்பது
எதிரி நாடு என்பது
இந்தியாவில் இருந்து
பிரிந்தது...
அண்டை மாநிலங்கள்
என்பவை தண்ணீர்
தராதவை...
நேதாஜீ அவர்களே கேட்பீராக
தீவிரவாதிகள் என்பவர்கள்
கழுத்தை கொய்பவர்கள்..
காந்தி தாத்தாவே
சற்று அமருங்கள்
அகிம்சை என்பது
முட்டிக்கால் போட வைப்பது..
இரும்பு மனிதரே
இந்தியாவை நீர்
இணைத்துவிட்டதிலிருந்து
சதா சண்டை எல்லைகளுக்காக..
தெலுங்கானாவிலிருந்து
வந்திறங்கியவர் உணவகம்
நடத்துகிறார் ஆந்திரா மெஸ்
என்ற பெயரோடே...
பாவமய்யா பாரதி
மறுபிறவியில் எந்தத்
தாலுகாவில் வரிசையில்
நிற்கிறாரோ சாதி சான்றிதழ் வாங்க...
இவர்கள்
தூக்கி அடிப்பதிலும்
வழக்கு நடத்துவதிலும்
நாடுகளை சுற்றுவதிலும்
சமூக தளங்களுக்கு
சோளப்பொறி ஆகிவிட்டனர்..
அமெரிக்க அதிபர் வந்தால்
பத்திரிக்கைகளில் வரும்
அவர் பரோட்டாவை பிச்சி போட்டு
சாப்பிட்டார் என்றும்
மனைவிக்கு புடவைகளை பரிசாய்
பெற்றாரென்றும் கொட்டை எழுத்தில்..
உலகம் ரொம்ப சின்னதய்யா
வேற்று கிரகவாசிகளே
சீக்கிரம் எங்கள் பூமியை
அடிமை படுத்துங்கள்...
ஒன்றாக சேர்ந்து எங்கள்
பூமிக்கு சுதந்திரம் வாங்கிவிடுகிறோம்
எங்கள் புண்ணிய உருண்டை இது
இரத்தம் சிந்திய உருண்டை இது என
பூமி பக்தி பாடல்களை எழுத வேண்டும்..
நீலம் பச்சை பழுப்பு என்று
க்யூபாவிலிருந்து ஒருவர்
உலகக் கொடியை
தயார் செய்துவிடுவார்...
--கனா காண்பவன்