வேலைவாய்ப்பு

சீமையில வேலையின்னு
சிரிச்சிப்புட்டு வந்துபுட்டேன்
இங்க வந்தா எம் பொளப்பு
சிரிப்பாக சிரிக்குதடி

செத்தியோண்டு இடத்துக்கு
மூவாயிரம் கேக்குறாக
குடுத்தாலும் பரவாயில்ல – கூட
மூணுபேரு சேக்குறாக

ஆக்கிவச்ச சோத்தக்கூட
பொரிச்சுத்தான் விக்கிறாக
நம்ம புழக்கடையில் விளைஞ்சுதெல்லாம்
விலைக்குத்தான் கொடுக்குறாக

இப்பக்கூட கூலியில
சிலநூறு கூடியிருக்கு – ஆனாலும்
செலவுக்கு பலநூறு தேவையிருக்கு

பூப்போட்ட சேலை ஒண்ணு
புதுசாத்தான் எடுத்திருக்கேன்
வரும்போது எடுத்துவாரேன்
பண்டியலுக்கு உடுத்திக்கலாம்

பாப்பாவ படிக்கச் சொல்லு
பணக்காசு சேர்த்துடலாம்
வரனேதும் வந்துச்சுன்னா
கொஞ்ச நாளு தள்ளிப்போடு


ஆத்தா, நீ எதுக்கும் கலங்காத
எப்படியும் சேர்த்துடலாம்
காரவீட்டுக்காரர் கொடுத்த கடனை
மெல்ல மெல்ல அடைச்சிடாலாம்

இந்தக் கடன அடச்சிப்புட்டா
வேறேதும் பாக்கியில்ல
திரும்பப் போயி கேட்டாலும்
மறுக்காம தருவாரு

இப்போதைக்கு அனுப்பிவச்ச
ரூபாய மறக்காம
வட்டிக்கு கொடுத்துவிடு
இல்லாட்டி மேக்கொண்டு
ஏதாச்சும் வேணுமுன்னு கேப்பாரு

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (9-Jul-15, 8:07 pm)
பார்வை : 94

மேலே