காதோடுதான் நான்
காதோடுதான் நான் .....
பொன் வண்டுகள் இசைபாட
கருங்காக்கைகள் எதுகை வரிசையில்
மரங்கள் மோனை வரிசையில்
கிளைகள் அசையெழுத்திட
கிளிகள் ஒசையெழுத்திட
இலைகள் சிலிர்ப்பெழுத்திட
உயிர்கள் மூச்செழுத்திட
காற்றின் பல்லக்கில் குளிர்ந்திட
தென்றலோடு பேசும் கவிதைகள்..!
சேற்றுத் தாய் மடியில்
செந்தாமரைகள் விழித்தெழ
ஆற்றுத் தந்தையின் முரட்டுத்
தோள்களில் துள்ளிக் குதித்தெழ
நறுமணம் கமழும் கவிதைகள்..
சோற்று வண்டு களின்
ராகங்கள் மீட்டெழ
அற்றைத் திங்களில்
நம்பிக்கை ஊற்றெழும்
ஊற்றின் ஊஞ்சலில் மிதந்திட
இனிய குரலில் பேசிடும் கவிதைகள்..!
நீங்காத நினைவுகளும்
நீலக் கடலின் பெருமூச்சும்
நீங்காத ஆசைகளும்
நீடித்த புரிதல்களுமாய்
காதோடு பேசும் கவிதைகள்..
காலக் கண்ணாடியின்
சோகத்தில் இன்பமும்
பள்ளம் தேடும் வெள்ளமும்
கடலைத் தேடும் ஆறுமாய்
முகம் பார்க்கும் கவிதைகள்..
கரைப்புரளும் அவையாவும்
மவுன மொழி நுரைத் தள்ளி
காற்றின் எழுத்துக்க ளாய்
ரகசியம் பேசும் கவிதைகள்..!