எம்பேரு யாழினி

அப்பா..அப்பா...
உங்களுக்கு ஆபீஸ் கெளம்ப நேரமாயுருச்சா?
எங்கப்பாவும் பெரிய வேலை பாத்தாரு
கண்ணி வெடியில காலு போனப்புறம்
இப்போ வீட்டுல தான் இருக்காரு...!!

அம்மா...அம்மா...
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...
எங்கம்மாவும் கொள்ளை அழகு தான்
ஆனா புகைவெடி குண்டு பட்டதுல இருந்து
தோலெல்லாம் தடிச்சு கறுத்துப் போய்ட்டாங்க..!!

அண்ணே...அண்ணே....
உங்களுக்கு கிரிக்கெட்டுனா புடிக்குமா...?
எங்கண்ணன் கூட இப்போ
உங்க ஊர்ல தான் இருக்கானாம் - பாவம்
அவனையும் உங்க டீமுல சேத்துக்கோங்க..!!

அக்கா...அக்கா....
உங்களுக்கு மாப்ள பாத்தாச்சா...?
எங்கக்காவுக்கும் தேதி குறிச்சோம்
ஆனா மாப்ள வீட்ல செல்லடிச்சுடாங்கலாம்
பாவம் இவ அழுதுட்டே கெடக்கா அப்புறம்...!!

தம்பி...தம்பி....
நீ எந்த ஸ்கூல்ல படிக்குற....?
எங்க ஸ்கூல் இடிஞ்சுருச்சு அணுகுண்டு அதிர்வுல
நா ஏழாப்பு படிச்சுருக்கேன்
உன்கூட என்னையும் கூட்டிட்டு போறியா...?

பாப்பா...பாப்பா...
அடம்புடிக்காம சாப்புடு மா....
எங்க பக்கத்து வீட்டு ஸ்ரீ குட்டி
பால் இல்லாம அழுதழுது செத்துருச்சு
எனக்கு அத ரொம்ப புடிக்கும்...!!

இதுக்கெல்லாம் என்ன காரணமுன்னு
எனக்கேதும் வெளங்கல
உங்களுக்காச்சும் தெரியுமா அக்கா....??

அச்சோ....இவ்வளோ நேரம்
நான் யாருனே சொல்லலையே...
எம்பேரு யாழினி...
நானும் உங்கள மாதிரி தமிழ் தான் பேசுவேன்..!!

உங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் நடுவுல
பெருசா ஒரு கடல் இருக்காமே....
அதுனால தான் இவ்வளவு நாளா
நீங்க எங்கள பாக்க வரலையா....?

ஆனா...
எங்கப்பா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாரே
"கடலினும் பெரிது - நம்
தமிழரின் நேசமும் பாசமும்" அப்படின்னு
அது உண்மையா அண்ணே...?!?
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

( குறிப்பு - படம் எந்த ஒரு தவறான எண்ணத்திலும் பதிவிடப்படவில்லை )

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (10-Jul-15, 5:52 pm)
பார்வை : 397

மேலே