கூண்டில் இருக்கிறது என் சிறகுகள்
நீ
சிறகுகளைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறாய்.
நான்
வானத்தைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் கூண்டோடு
கடந்து செல்கிறது காலம்.
***************************************************************************************
ஆதார் கார்டு,
பான் கார்டு,
வாக்காளர் அட்டை,
ஓட்டுனர் உரிமம்,
ரேஷன் கார்டு...
இன்ன பிற எல்லாம்
ஒருவரை அடையாளப் படுத்தவாம்.
என்னிடமும் எல்லாம் இருக்கின்றன.
என்னை அடையாளம் தெரிகிறதா உங்களுக்கு?.
***************************************************************************************
இந்த "வாக்குறுதிகள்"
நாக்கினால் செய்யப் பட்டவை.
வாக்கினால் செய்யப்பட்டவை அல்ல.
***************************************************************************************
நான் யாராயிருக்க வேண்டும்
எனத் தீர்மானிக்கிறாய் நீ.
நான் யாராய் இருக்கிறேன் என
அறிய விரும்புகிறேன் நான்.
உனக்கும் எனக்கும் இடையில்
அல்லாடுகிறது என் பதின்மப் பருவம்.
***********************************************************************************************