ஊட்டி பயணமும் உயர்ந்த மலைகளும்

வாட்டி கொல்லும் வெயிலுக்கு
ஊட்டி செல்ல ரயிலேறினோம்!

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கிழே படுக்கை
நாட்டி பேரனுக்கும் பியூட்டி பேதிக்கும்
மேல்தட்டிலே படுக்க, நாங்கள் இருவரும்
நடுதட்டிலே படுக்க, பயணித்தோம்....

இருட்டை விரட்டிய சூரியன்
வானத்தைக் கிழித்து வெளியே வர
விடியலில் வந்தோம் மேட்டுப்பாளையம்

தென்றலும் சூரியனும் கைகோர்த்து
திரியும் இதமான மிதமான சுழல் அது

நீலகிரி மலை செல்லும் ரயில்
வெள்ளைக்காரன் விட்டுசென்ற
நீலமலைக் குதிரை!

கரும்புகை ஏவுகணையை விண்ணில் செலுத்தி
இரும்பு சாலையில் ஏறிப்போனது

கையில் இருந்த கனங்களோடு
இதய பையில் இருந்ததையும்
இறக்கி வைத்த ஒரு உணர்வு!

இனம்புரியாத இறக்கை ஒன்று
உணர்வோடு ஒட்டிக்கொள்ள
அறுபதும் ஆறாக! நாற்பதும் நாலாக!
ஆறு குழந்தைகளாக பயணித்தோம்

ஐயோ அப்பா அங்கே பாருங்களேன்
வாட்டர் பால்ஸ் ஹையா சூப்பர்
ஐயோ தாதா இங்க பாருங்களேன்
எவ்ளோ பெரிய மரம் !

மலைக் குகை பயணம்
இருளில் பயப்படும் பிள்ளைகளும்
குகை இருட்டிலும் குதூகலிக்கும்
ஒரே இடம் அது!

மலைமகள் குளித்த நீர்
அவளின் தேகம் நனைத்து
மக்களின் தாகம் தீர்க்கும்
நதிகளாய் நீருற்றுக்களாய்
ஆறுகளாய் ஓடைகளாய் ஓட
அதில் அவள் தேகத்தின் வாடை வீச!
அது அவளின் பாதம் சேரும்போது
அள்ளிப்பருகும் ஆயுர் வேதமாகிறது!

பெண் பார்க்க போகும்
மாபிள்ளையின் மனம்போல்
மக்களின் மனது குதூகலிக்க
மலையூருக்கு வந்தோம்
மலைமகளை காண

நீல நிற ரயிலேறி
நீலகிரி மலை வந்தோம்
அப்பா சொன்னார் ஸ்விட்டரை எடுத்து
அம்மாவிடம் கொடு என்றார்!

ஐயோ எனக்கு குளிரவேயில்லப்பா என்று
இரண்டு கையையும் அக்குளில் வைத்த
அண்ணனைப் பார்த்து
எனக்குந்தான் என்றாள் தங்கை!

பூங்காக்கள் ஏரி என்று
ஏறி இறங்கி
பாங்காக பார்த்தோம்
பரவசமடைந்தோம்!

ரசனைக் கண்ணுள்ள நான் மட்டும்
கவிதைக் கண்ணாடி அணிந்திருந்தேன்
கவிஞனாக பார்த்த எனக்கு….

அது ஊட்டி மலை அல்ல
பியூட்டி சிலை ! இயற்கையின்
உன்னத நிலை ! கவிஞனின்
கருவூல அலை! இறைவனின்
ஈடில்லா எழுதாத கலை ! என்றும்
இல்லை அதற்கு விலை !

அங்கே தளிர் சூரியனோடு
கைகோர்த்து வந்த தென்றல்
இங்கே குளிர் சாரலோடு சல்லாபம்!

மலையவளைக் கண்டு
மலைப்பானது நெஞ்சு !
ஒரு ஊரையே குளிர்சாதனப் பெட்டிக்குள்
வைத்திருக்கும் இயற்கையின் விந்தை !

தேயாத தேகம் மறைக்க
தேயிலையால் தைத்த ஆடை !
ஓயாத காற்றடித்தாலும்
ஒதுங்காத உன்னத ஆடை !

வெள்ளை மேக வாலிபனின்
கொள்ளை மோக உரசலின்
வேர்வைத்துளிகளாய் பனித்துளிகள் !

பச்சை நிரத்தழகியை இங்கே
திராவிட மேகமும் தீண்டிப்பார்க்க!
காமத் தென்றல் தூண்டிவிட!
காந்தர்வ மழை பொழிய
இயற்கை இளசுகளின்
இன்பக் களியாட்டம் அரங்கேற !
மலையரசியின் தேகம் மெருகேற

தேன் சொட்டும் மலர்களும்
வான் முட்டும் மரங்களும்
நான்மட்டுமல்ல !
மீன்கொண்ட விழியாளும்
கான் கண்ட முனிவனும்
தான் மறந்து தன் நிலை மறந்து போவான்
மலையரசியின் மங்காத அழகு கண்டு !

எழுதியவர் : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக் (10-Jul-15, 9:39 pm)
பார்வை : 892

மேலே