பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் - 3

குளித்து முடித்து
கண்ணாடி முன் நின்று
தலைத்துவட்டிய தருணத்தில்
'' தினமும் குளித்தாலும்
மனதில் அழுக்கு மறையவில்லை''
என்ற படியே வெளியே வந்தான்
எனக்குள்ளிருந்து மீண்டும் அவன்...
ஏ முட்டாளே....
நீ அமைதியாக இரு
எனக்கு எல்லாம் தெரியும் என்றேன்
கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டே...
உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றாயே
பிறகு எதற்கு கண்ணாடியை பார்க்கிறாய்?
ஓ...
உனக்கு கண்கள் இருந்தாலும்
உன்னையே உன்னால் பார்த்துக் கொள்ள முடியாதல்லவா?
என்றான் சிரித்துக் கொண்டே...
முகத்தைப் பார்க்க கண்ணாடி இல்லாமல்
எப்படி பார்ப்பது ? என்றேன் நான்..
அகத்தைப் பார்க்க
கண்ணாடி தேவைப் படுவதில்லை
என்றான் அவன்...
இருப்பினும் உன்னை விட
கண்ணாடி புத்திசாலி என்றான்...
அட கோமாளியே
கண்ணாடியை கண்டு பிடித்தவர்களே நாங்கள்தான்
அது எப்படி எங்களை விட புத்திசாலியாகிவிட முடியும்?
மேலும்
நான் தலை சீவினால் சீவும்
நான் தலைக் கலைத்தால் கலைக்கும் - இப்படி
நான் செய்வதை அனைத்தையும்
அப்படியே அது செய்யும்
அதை விட்டால் வேறென்ன செய்யும்?
என்றேன்...
நீ பேசினால் அது பேசாது
உன்னால் அதை பேச வைக்கவும் முடியாது
மேலும்
பேசுவதில் எந்த பயனும் இல்லை என்பதும்
அதற்கு நன்றாக தெரியும்...
நீ சிரித்தால் அது சிரிக்கும்
நீ அழுதால் அது அழும் - ஆனால்
நீ கண் மூடினால் அது மூடிக் கொள்ளாது
அது கண் திறந்தே உன்னை
பார்த்துக் கொண்டிருக்கும்...
மேலும்
அது உன்னை போல
கண்ணை மூடிக் கொண்டு
கனவு காணவும் பிடிப்பதில்லை அதற்கு...
முக்கியமாக
கண்ணாடி எப்போதும் பொய் சொல்லுவதில்லை என்றான்..
என்னைப் போலவே செய்து காட்டும்
ஒரு பிம்பம் அது...
என்ன உண்மையை சொல்லி கிழித்து விடும் என்றேன்
கொஞ்சம் ஆவேசாமாக...
நீ எப்படி நடிக்கிறாய் என்ற உண்மையை
உனக்கு சொல்கிறது என்றான் அமைதியாக....
எனது
உச்சக் கட்ட கோபத்தில்
உடைந்தது கண்ணாடி பல துண்டுகளாக...
இப்போது
எல்லா கண்ணாடி சில்லுகளிலும்
எதிரொலித்துக் கொண்டே
சொல்லத் துவங்கினான் அவன்...
வாழ்க்கையென்பதும் ஒரு கண்ணாடி
அதை உடையாமல் பார்த்தால்
ஒன்றாக தெரிவாய்
உடைந்த பின் பார்த்தால்
ஒவ்வொன்றாக தெரிவாய்...
********************* ஜின்னா *********************
அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)