அவன் என்பவன்

என்னுடைய இல்லமும்
அவனுடைய இல்லமும்
அண்டை வீடாகவோ
எதிர்வீடாகவோ இருந்ததில்லை

அவனும் நானும் மழலையர்ப்
பள்ளியிலிருந்து
பதின்மவயது வரை ஒன்றாய்ப்
படித்தவர்களில்லை

அவன் பிறந்தது காவிரி பாயும்
திருச்சியுமில்லை
நான் பிறந்தது தாமிரபரணி பாயும்
திருநெல்வேலியுமில்லை

அவனுடன் நானும் கோவிலுக்கோ
என்னுடன் அவனும் மசூதிக்கோ
எப்போதும் சென்றதுமில்லை
வந்ததுமில்லை

அவன் அக்காத் திருமணத்தில்
நானும்
என் அண்ணன் திருமணத்தில்
அவனும்
பந்திப் பரிமாறியதில்லை

சென்னை வனவாசத்தின்
முதல் படலத்தில்......
குமாரின் நண்பனின்
திருவல்லிக்கேணி
பத்துக்கு பத்து அறையில்......

கொஞ்சம் எனக்கும்
இடம் விட்டு
தள்ளிப் படுத்துவிட்டு...........

“கவலைப்படாம தூங்கு மாப்ள
காலையில பேசிக்கலாம்.......”
என அவன் சொன்ன
அந்த நொடியில்............

குமாரின் நண்பன்
எனக்கும்
உயிர் நண்பனாகியிருந்தான்............!!!

எழுதியவர் : தர்மராஜ் (11-Jul-15, 3:11 pm)
Tanglish : avan enbavan
பார்வை : 502

மேலே