திரைகடல் ஓடியும்
திரைகடல் ஓடியும்...
திரவியம் தேடு,
தேடியும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்,
தேடல் முடிந்தபாடில்லை....
என் நாட்டில்
எஜமானாய் வாழ்வதற்காய்,
அயல்நாட்டில்
அடிமையாய் வாழ்கிறேன்,
உறவுகளை மறந்து....
உணர்வுகளை துறந்து....
பணத்திற்காக
பறந்து திரிகிறேன்,
பணம்.....
வாழ்க்கையின்
அத்தியாவசிய தேவை,
மிக....மிக....
திரும்பி பார்க்கிறேன்,
நான் வந்த பாதையை.....
குறுகிய வீடு,
இல்லையில்லை
அது ஒரு குருவிக்கூடு,
கூட தங்கைகள் வேறு....
கருவறை தோழிகளை,
கரைசேர்க்க வேண்டிய
கடமை எனக்கு,
நான் முந்திக்கொண்டேன்
கல்யாணத்தில்,
வருகின்ற வருவாயில்,
முதலாமவளை கரைசேர்க்க....
இனிமையாய்
கழிய வேண்டிய இரவுகள்,
இம்சையாய் கரைகின்றன....
கயிற்றுகட்டில் கத்துகிறது
எனப்பதறி,
கோரைப்பாய் விரித்தால்,
சரசரப்பு சங்கடப்படுத்துகிறது....
போர்வை விரித்து
கூட நினைத்தால்,
வளையோசை கலகலவென,
கவிதைகள் படிக்க....
கொலுசொலி
சங்கீதம் வாசிக்க.....
குறுகிப்போய்விடுகிறது,
கூச்சத்தில் ஆசைகள்....
தேவைகளை பூர்த்திசெய்ய,
பணத்தை தேடி
பறக்கவேண்டிய கட்டாயம்,
பறந்தேன்.....
ஊரினை மறந்தேன்....
உறவினை மறந்தேன்....
கடமைகள் கழிய,
காலமும் கழிந்தது,
வசதிகள் மட்டுமல்ல,
வயதும் கூடியது....
அங்கே
மலர்ப்படுக்கை வாடுகிறது....
இங்கே
முள்படுக்கை குத்துகிறது....
ஒருநாள்...
உழைத்தது போதுமென்று
களைத்து போனேன்,
இனிமேல்.....
என்தேசம்,
என் கீழோரு குட்டிஉலகம்,
இனிக்கிறது
நினைக்கும்போதே.....
ஒருநாள்....
அடக்கிவைத்த ஆசைகளை,
கொட்டிவிட நினைத்து,
என்னவளின் கரம்பிடித்து
கண்சிமிட்டினேன்,
'ச்சீ போங்கள்....
வயதுக்குவந்த
பிள்ளைகள் இருக்கிறார்கள்,
இப்போ போய்.....'
என்னவள்,
கூச்சத்தில் குறுகி
வயதை நினைவூட்டுகிறாள்....
திரைகடல் ஓடியும்....
திரவியம் தேடினேன்,
தொலை(ந்)(த்)த இளமையை
எங்கே தேடுவேன்.....