காற்றே இதை என் காதலியிடம் சேர்த்துவிடு

கார்மேகம் முன்பு கைகட்டி நின்று
கடன் கேட்டு வாங்கி வந்த
கருமை நிறமதை திரித்துச் செய்த
கலையா சிகைதனை கொண்டவளே

என் விரல் செய்த பாக்கியம்
உன் தலை கோதும்
தருணங்களில் தான்..!

விதையிட்டு வந்ததோ அல்லது
விதையின்றி விளைந்ததோ
புருவங்கள் என்று மனித
உருவங்கள் கூறும் கரும்புற்கள்

என் இதழ் செய்த பாக்கியம்
உன் புருவப் புதர்களில் புரண்டெழும்
தருணங்களில் தான்..!

வெந்நிற வானில் நீந்தும்
கருநிற நிலவு உன்னிரு
கண்கள் என்று காடெல்லாம்
கருங்குயில் கூவிச் செல்லும்

என் இமை செய்த பாக்கியம்
உன் விழி காக்கும்
தருணங்களில் தான்..!

உலகக் கனிகள் சாறெடுத்து
உலர வைத்து இரண்டாய் தைத்து
உதடுகளென்று பெயர் வைத்து
உன் முகக்கடலில் படகாக்கியவளே

என் சுவாசம் செய்த பாக்கியம்
உன் உதடுகள் உரசும்
தருணங்களில் தான்..!

கவிதை எழுதாக் காகிதங்களாய்
உன் கன்னங்களிருக்க காமமெனும்
மை நிரப்பி வரிகள் சிந்தக் காத்துக்
கிடக்கும் என் உதடுகள்

என் ஆண்மை செய்த பாக்கியம்
உன் கன்னக் கரையில் நீந்தும்
தருணங்களில் தான்..!

முடிந்து விடாது என் வரிகள்
உனக்காகத் தொடங்கினால்
முழு நிலவும் கண் வைத்துக்
கரைந்து விட்டது விடிந்தால்
கதிரவனும் கண் வைப்பான்..

மறைத்துக் கொள் உன்
அழகினை

நானும்..

நிறுத்திக் கொள்கிறேன் என்
வரியினை.

"காதல் வீசும் காற்றே இதை என்
காதலியிடம் சேர்த்து விடு"...



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (14-Jul-15, 8:44 pm)
பார்வை : 221

மேலே