என் வாழ்க்கைப் பயணம் அனுபவச் சாரல்கள் - 9
![](https://eluthu.com/images/loading.gif)
இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுதிட துவங்குவற்கு காரணம் , ஒரு நண்பரின் உந்துதலே ...மாறுதலுக்கு நானும் எழுதிட நினைத்தவுடன் , என்ன தலைப்பில் எழுதலாம் என்று யோசித்தேன் . ஏதாவது ஒரு தலைப்பில் எவராவது ஒருவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அறிவேன் . ஆகவே , நம் அனுபவச் சாரல்களையே , என் வாழ்க்கை பயணம் எனும் தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். இதுதான் இக்கட்டுரை பிறந்த கதை .
எட்டுப் பகுதியை கடந்து விட்டேன் ....ஒன்பதாவது தொடர்கிறது இங்கே ....
நான் இந்தப் பத்தியை எழுத துவங்கியபோது , என் செல் போனில் ஒரு ஒலி கேட்டது . அது நான் செய்திகளுக்காகவும் , மேசஜ் (SMS )க்காகவும் அமைத்து வைத்திருந்த ஒலியாகும் . பல நேரங்களில் உடனே எடுத்து பார்க்க மாட்டேன் . ஆனால் அந்த நேரம் , உடனே பார்த்தேன் , NDTV NEWS வந்திருந்தது . அதில் வந்த செய்தியினைக் கண்டு உள்ளம் உறைந்தேன் ....என்னையறியுமால் விழிகள் ஈரமானது ...ஆம் , தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த , அனைத்து தமிழ் உள்ளங்கங்களையும் தனது இசை மூலம் கவர்ந்திட்ட , மெல்லிசை மன்னர் என்றும் MSV என்றும் அழைக்கப்பட்ட , திரு விஸ்வநாதன் அவர்கள் மறைந்தார் எனும் பேரிடி செய்தியாகும். ஒரு காலத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு , மெல்லிசை மன்னர் மெட்டமைத்த இசை மூலம் T M சௌந்தரராஜன் பாடினார் என்றாலே இன்பத்தேன் பாயும் செவிகளில் , உறுதியான உள்ளத்தையும் உருக்கிடும் ....மயக்கிடும் மனங்களை ... மறக்கத்தான் முடியுமா ... என்றும் நம் நெஞ்சில் நிலைத்து ஒலித்துக் கொண்டே இருக்கும் . காதல் பாடல், சோகப்பாடல் , தத்துவப்பாடல் என அனைத்திற்கும் , காட்சிக்கு ஏற்ப , மெட்டமைத்து பாடல்களை அள்ளியள்ளி வழங்கிய அந்த மாபெரும் இதயம் நின்றுவிட்டது ... நிரந்தர ஓய்வெடுக்க சென்றவிட்டது என்று நினைக்கும்போது , நெஞ்சம் துடிக்கிறது ....கதறி அழவே நினைக்கிறது . இனி அவர் இசையில் உருவான பாடல்களை கேட்டுத்தான் நாம் ஆறுதல் அடைய முடியும் .. என்றும் அதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் .. நிச்சயம் அவர் இசைக்கு அழிவே இல்லை ....இறுதி தமிழன் உள்ளவரை அவரின் இசையும் வாழும் என்பதில் ஐயமே இல்லை . என் சிரம் தாழ்த்தி , கண்ணீர் மல்க அவருக்கு என் இதய அஞ்சலியை செலுத்துகிறேன் .
ஒருவர் பிறக்கும்போது பெற்றவரும் , சுற்றி இருப்போரும் அறிவாரா .....எதிர்காலத்தில் இவர் எப்படி இருப்பார் ....எப்படி வருவார் என .. ஆனால் அவர் மறையும்போதுதான் அந்த உண்மை ..அவரைப்பற்றிய புகழ் ...நமக்குத் தெரிகிறது .
ஒருமுறை பள்ளிக்காலத்தில்தான் , நண்பர் ஒருவர் சினிமா ஷூட்டிங் பார்க்கப் போறேன் வரியா .. என்றார். அந்த பருவத்தில் , அதெல்லாம் ஒரு அரிதான வாய்ப்பு . மேலும் எனக்கும் விருப்பம் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். அப்போது எங்கள் வீட்டிற்கு அருகில் , இப்போது பாரதிய வித்யா பவன் எனும் பள்ளிக்கூடம் இயங்குகிறது .. கீழ்ப்பாக்கம் பகுதியில் ...அதுதான் அன்றைய " NEWTON STUDIO " . அன்று நான் பார்த்தது , இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நடித்த காட்சி ஒன்று , " பொம்மலாட்டம் " என்ற திரைப்படத்திற்காக . வரும்போதே மேக்அப் முடித்து நாகரீக உடையில் வந்து இறங்கினார் . ஏற்கனவே நகைச்சுவை நடிகை மனோரமா அவர்கள் , நடிகர் சோ அவர்கள் , நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் நடிக்கும் காட்சியினை படமாக்கினார்கள் . ஒரே காட்சியை பலமுறை எடுத்தார்கள் . அபோதுதான் தெரிந்து கொண்டேன் ... நடிப்பதும் படம் எடுப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று . சுமார் ஒரு மணி நேரம் பார்த்தேன். மிகவும் குறைந்த பார்வையாளர்கள்தான் இருந்தார்கள் . மனோரமா அவர்கள் மிகவும் கலகலப்பாக எல்லோரிடமும் பேசினார். சோவை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. காரணம் உடை அலங்காரம் அப்படி. லுங்கியை மடித்து கட்டிக் கொண்டிருந்தார்...ஒரு பெரிய ஒட்டு மீசையை வைத்திருந்தார் .. சட்டை போடாமல் பனியன் மட்டுமே அணிந்திருந்தார். இடையிடையே ஜெயலலிதா அவர்கள் ஒரு ஆங்கில புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். நான் சொல்வது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு . இன்னும் அவர்கள் அனைவரும் அணிந்திருந்த உடைகளின் நிறம் கூட எனக்கு நினைவு உள்ளது . அனைவருக்கும் சூடான டீ கொடுத்தார்கள் . அக்காலத்தில் அதுவே பெரிய விஷயம்தானே .
வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நமக்கு ஒரு அனுபவம்தான் . நல்லதும் கெட்டதும் உண்டு. சில நம் நெஞ்சில் ஆழமாக பதிகின்றன ... பல மறந்தும் விடுகிறது.
நம் ஆசைகளும் ஏக்கங்களும் எண்ணங்களும் நிறைவேறுமானால் நாம் மகிழ்கிறோம் ...இல்லையெனில் சோகம் நம்மை சூழ்ந்து கொள்கிறது. அடிப்படைத் தேவைகள் இருப்பவரோ மேலும் அதிகம் தேவையென ஆசைப்படுகிறார் ...ஒன்றுமே இல்லாதவரோ , அடிப்படை வசதிகளாயினும் கிடைத்தால் மகிழ்ச்சி என நினைக்கின்றனர் . ஆனால் எல்லோருக்கும் எல்லாமே நினைத்தப்படி நடப்பதும் இல்லை ....விருப்பங்கள் ஈடேருவதும் இல்லை ...ஆசைகளை அடக்கி வாழக் கற்றுக் கொண்டாலே , இருப்பதை வைத்து வாழப் பழகிக்கொண்டாலே , நம் வாழ்வும் இனிக்கும். ஆனால் ....எல்லோரும் சராசரி மனிதர்தானே ....மனம் மாறினால் ....நிலை மாறும் .
மீண்டும் சந்திக்கிறேன் .....
பழனி குமார்
15.07.2015