தெய்வம் சான்ற திறல் --7
தெய்வம் சான்ற திறல்-7.
ஒரு மழலையர் பள்ளியின் கலை ஆசிரியை தன் வகுப்பில் உள்ள குழந்தைகளை அவர்களுக்கு மனதுக்குப் பிடித்த எதையாவது படமாக வரைந்திடச் சொன்னார். அவரோ, அவ்வப்போது வகுப்பறையைச் சுற்றி வந்து அவர்கள் எப்படி வரைகிறார்கள் எனப் பார்த்து வந்தார். ஒரு குழந்தை மட்டும் வைத்த கையை எடுக்காமல், மிகக் கவனமாக படம் வரைவதில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு அதன் அருகில் சென்று உன்னிப்பாகக் கவனித்தார். அது என்ன வரைகிறது என அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவர் அந்த குழந்தையிடம்,
“நீ என்ன வரைகிறாய்? எனக் கேட்டார்.
அதற்கு அந்தக் குழந்தை, “நான் கடவுளை வரைகிறேன்” என்றது.
“ஆனால் இதுவரை யாருமே கடவுளைப் பார்த்தது இல்லையே” என ஆசிரியை சொல்ல
“இன்னும் சில நிமிடங்களில் பார்ப்பீர்கள்” என்றது அந்தக் குழந்தை.
குழந்தையாக மாறா விட்டால் நாம் விண்ணரசில் நுழைய முடியாது என்ற கூற்று நமக்கு நினைவில் வந்தாலும், குழந்தைகளின் உலகமே தனியான ஒன்று என்பதும் நினைவுக்கு வருகிறது.. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். நாம் தெய்வம் என நம்பி கொண்டாடினால் மட்டுமே அந்த இறைவனை அனுபவிக்க முடியும், சுவைக்க முடியும். இறைவனை அடைய அடையாளங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.
அடையாளங்கள், குறிகள் என்ற வரிசையில், இலிங்கம் பற்றி சென்ற அத்தியாயத்தில் நாம் சிறிது அறிந்து கொண்ட நிலையில் அடுத்து கிறிஸ்துவர்களின் அடையாளாமாகிய சிலுவையைப் பற்றி இங்கு சற்று ஆய்வோம்.
ஆங்கிலத்தில் Cross எனப்படும் சிலுவை, இலத்தீனில் Crux என்பதில் இருந்து வந்ததாகும் இது “கிறிஸ்தவ மறையின் முக்கிய அடையாளம்” என என்சைக்ளொபீடியா பிரிட்டாணிக்கா கூறுகிறது.
கிரேக்க மொழியில் சிலுவை என்பது ”stauros” --இதற்கு செங்குத்தான கொம்பு, பலகை என்றே பொருள். கிரேக்க திருவிவிலியத்தில் இது 27முறை பயன்படுத்தப்பட்டு இருப்பினும் சில நேரங்களில் skolops எனும் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுவும் அதே பொருளைத் தரும். இவ்விரு சொற்களும் திருவிவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் காணப்படவில்லை. ஆயினும், புதிய ஏற்பாட்டில், திருத்தூதர் நடவடிக்கை எனும் விவிலிய நூலில் 5:30, 10:39, 13:29 ஆகியவற்றிலும், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடல் 3:13, மற்றும் ஒன்று பேதுரு 2:24, ஆகியவற்றில் கிரேக்க சொல் ஆகிய xy’lon என்பதே பயன் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மரக்கட்டை, தடி, அல்லது பொதுவாக மரம் என்பது பொருளாகும்.
இந்த சிலுவை நான்கு வடிவங்களில் இருந்து வந்துள்ளது.
1. Crux immissa- இதுவே நாம் இப்போது படங்களில் மற்றும் தேவாலயங்களில் காணும் வடிவம் ஆகும்
2. 2. Crux Commissa- அல்லது புனித அந்தோணியாரின் சிலுவை; ஆங்கில எழுத்து T வடிவில் இருப்பது.
3. 3. The Greek Cross-- கிரேக்க சிலுவை வடிவத்தில் ஒவ்வொரு துண்டும் நீளமாய் அமைந்து இருப்பது.
4. Crux decussata- இது புனித அந்திரேயரின் சிலுவை. இதில் ஆங்கில எழுத்து X போன்ற வடிவில் சிலுவை வடிவமைப்பது ஆகும்
சிலுவை தெய்வீகத்தின் மற்றும் நிலை வாழ்வின் அடையாளமாக கிறிஸ்துவுக்கு முன்னரே எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது “செராபிஸ்” ஆலயத்தில் இருந்த கண்டுபிடிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த சிலுவை அடையாளத்தை ஸ்பெயின் தேசத்தவரும் பெரூ மக்களும் கூட பயன்படுத்தினர். ஆனால் அவர்கட்கு இது நான்கு ( நீர், நிலம், காற்று, ஆகாயம் ) என பூதங்களாகவும், நாங்கு பருவங்களாகவும் திசை காட்டும் கருவியின் நான்கு திசைகளின் குறியீடாகவும் இருந்து வந்துள்ளது.
சிலுவையை வலியின் அடையாளமாக திருவிவிலியத்தில் கிறிஸ்துவே பயன்படுத்தி உள்ளார். மத்தேயூ 10:30 மற்றும் 16:24 இல் வலியையும், துன்பத்தையும் சுமை சுமப்பதையும் அவர் சிலுவையின் அடையாளமாகக் குறிப்பிட்டு உள்ளார்.
புனித பவுல் தவறு உணர்ந்து மனம் திருந்தும் கொள்கையை வலியுறுத்தி சிலுவையை 1.கொரி 1:18, கலா, 6:14, பிலி 3:18, கொலோ 1:20 இல் குறிப்பிட்டு உள்ளார்.
மற்றும் யூதர்கட்கும் பிற இனத்தவர்க்குமான ஒற்றுமையின் பிணைப்பு என எபேசியர் 2:16 லும், நம்புவோரையும் கிறிஸ்துவையும் இணைக்கும் பிணைப்பு என கலாத்தியர் 5:24 லும் சிலுவையை அடையாளமாகக் குறிப்பிட்டு உள்ளார்.
.
புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலில் சாபத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டு உள்ளார். 3:13 இல்” “மரத்தில் தொங்கும் ஒவ்வொரு மனிதரும் சபிக்கப்பட்டவரே” எனும்போது அவர் பழைய ஏற்பாட்டின் இணைச் சட்ட நூலின் அதிகாரம் 21ல் 22, 23இல் உள்ள திருவசனங்களையே மேற்கோள் காட்டி, அவை மரமென்றே குறிப்பிடுகிறார்.
சிலுவை என்பது கிரேக்கர், உரோமையர் காலத்தில் கொடிய குற்றவாளிகளை கொல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கழுமரம் ஆகும். பொதுவாக தேசத்துரோகம் போன்ற கொடிய குற்றம் புரிந்த மக்களையே சிலுவையில் அறைந்து கொல்லுவர். இப்பழக்கம் மாமன்னர் அலெக்சாந்தர் தொட்டு இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளனர். உண்மையில் நாம் இப்போது காணுகின்ற சிலுவையில் இருப்பது போன்று, இழுப்புளி கொண்டு பளபளவென்று நன்கு இழைக்கப்பட்ட பலகைகளை குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து செய்யப்படுவது அல்ல அன்றைய சிலுவை. மாறாக, கிடைக்கும் மரக் கட்டைகளில் ஒன்றை செங்குத்தாகவும் மற்ற ஒன்றை (அதன் மீது பொருந்துமாறு அல்ல) குறுக்கு வாட்டில் வைத்து கட்டி கைகளை கயிறு அல்லது ஆணி கொண்டு அடித்து தொங்க விடுவது ஆகும். அப்போது வாழ்ந்த உரோமை வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி யேசு கிறிஸ்து எனும் மனிதர் என்ன காரணத்திற்காகவோ சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். மரித்த அவரது உடலை, சிலுவையில் இருந்து பிரித்து எடுத்தபின், அவரது சீடர்கள் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக அந்த சிலுவை ஒரு பள்ளத்திலோ அல்லது கிணற்றிலோ போடப்பட்டு, கற்களாலும் மணலாலும் மூடப்பட்டது.
வரலாற்று ஆசிரியர்கள் ஆன சாக்ரடீஸ் (1,7) சொஸோமோன் (2,1), ரூஃபினுஸ்(1,7) மற்றும் தியோடோரெட் (1,8) ஆகியவர்கள் இது குறித்து நிறைய எழுதி உள்ளனர். ஆயினும் யூசெபெயூஸ் (vit, cont,iii 26:28) இன் கூற்றுப்படி கி.பி. 312 ஆம் ஆண்டில், மாக்செண்டியுஸ் என்பவரோடு உரோமை அரச பீடத்திற்காக கான்ஸ்டண்டைன் என்ற மன்னன் போரிட்ட பொழுது, தனது தாயின் தூண்டுதலால், கிறிஸ்தவர்களின் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவிடம் யுத்தத்தில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். பளபளக்கும் சிலுவை அடையாளம் ஒன்று வான் வெளியில் தோன்றி, “இந்த அடையாளத்தினால் உனக்கு வெற்றி உண்டாகும்”.என (இலத்தீனில் in hoc signo vinces) என்ற சொற்களும் தோன்றின. இதன்படி கான்ஸ்டண்டைன் யுத்தத்தில் வெற்றி கொண்டு உரோமை அரசன் ஆனான். அதனால் தனக்கு வெற்றி அளித்த கடவுளின் அடையாளம் ஆகிய சிலுவையை தனது நன்றியின் அடையாளமாக அவனது அனைத்து கொடிகளிலும், வீரர்களின் கேடயங்களிலும் பொறிக்கச் செய்தான்.
செப்டெம்பர் 14. கி.பி. 326இல், மன்னன் கான்ஸ்டண்டைனின் அன்னையாகிய புனித ஹெலினா ஒரு வயது முதிர்ந்த யூதரின் வழி காட்டலில், இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையையும், ஆணிகளையும், இயேசுவின் சிலுவையில் எழுதப்பட்ட தலைப்பு வாசகங்களையும் கண்டு பிடித்தார். அதுதான் உண்மையான சிலுவை என்பதற்கு மூன்று சிலுவைகளையும் இறந்து போன இளைஞர் ஒருவர் மீது வைத்தபோது, மூன்றாவது சிலுவை அவர் மீது பட்டதும் அவர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார் என்பதன் மூலம் தனிப்படுத்தப்பட்டது. இந்த நாளை, திருச்சபை திருச்சிலுவை திருநாள் எனக் கொண்டாடுகிறது. அத்தோடு, புனித வெள்ளி அன்று மட்டும் ஆலயங்களில் திருச்சிலுவை ஆராதனை என “திருச்சிலுவை மரம் இதோ; இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்; வருவீர் ஆராதிப்போம்” எனப்பாடி சிலுவையை மகிமைப்படுத்துகிறது.
ஜேக்கபோ டி ஓரஜின், ஜெனோவாவின் ஆயர் என்பவரும் தி கோல்டன் லெஜெண்ட்ஸ் எனும் பொற் சகாப்தங்கள் எனும் நூலின் ஆசிரியருமான வரலாற்று ஆசிரியர், உண்மையான இந்த சிலுவையின், தோற்றுவாய் என பல விவரங்களை அளித்துள்ளார்.
அவர் எழுதிய “ஆதாமின் வாழ்வில்” எனும் புத்தகத்தில், உண்மையான சிலுவை, ஆதாம் இறந்த போது அவரது மகனாகிய சேத், ’கருணையின் மர’த்தில் இருந்து சேகரித்த மூன்று விதைகளை ஆதாமின் வாயில் இட்டு புதைத்ததில் வளர்ந்த மூன்று மரங்களில் இருந்து வந்தது என்றும்.
மற்றொரு இடத்தில், “புனித சிலுவையைக் கண்டு பிடித்தது குறித்து” எனும் தலைப்பில், கண்டு பிடித்தது என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் செய்தும், இவ்வாறு கூறுகிறார். உண்மையான சிலுவை, நன்மை தீமை தெரி்விக்கும் அறிவின் மரத்தில் இருந்து, எந்த மரத்தின் கனியை ஆதாம் உண்டதால் பாவம் செய்தாரோ, அந்த மரத்தின் விதையினை ஆதாமிற்கு அவரது மூத்த மகன் காயின் இறந்தபிறகு பிறந்த மகனாகிய சேத்
நட்டு வைத்ததில் அது வளர்ந்து சாலமோனின் காலம் வரை தழைத்து நின்றது எனக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகட்குப் பிறகு, இந்த மரம் வெட்டப்பட்டு அதன் கட்டைகள் ஒரு பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டன. ஷீபா எனும் அரசி சாலமோன் மன்னனை சந்திக்க வரும் வழியில் இந்த மரத்தைக் கண்டு அதன் ஸ்திரத் தன்மையை வியந்து வணங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவள், சாலமோன் மன்னனை சந்தித்தபோது, அந்த பாலத்தின் ஒரு கட்டை, யூதர்கட்கும் யெகோவா இறைவனுக்குமான பழைய உடன்படிக்கைக்குப் பதிலாக புதிய ஒழுங்கு ஒன்றை கொணரும் என இறைவாக்கு மொழிந்ததாகவும் கூறுவர்.
இந்த இறைவாக்கினைக் கேட்டு அஞ்சிய சாலமோன் மன்னன், தமது யூதமக்களின் அழிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், அந்த மரத்தை எவரும் கண்டு விடாதபடி புதைத்து விட்டான். ஆனால் பதினான்கு தலைமுறைகட்குப் பின்னர், அந்தப் பாலத்தின் ஒரு பகுதி்யாகிய மரக் கட்டையில் இருந்தே இயேசுவின் சிலுவை வடிவு அமைக்கப்பட்டது என்பர்.
கீழை புராதன திருச்சபையின் புனித பாரம்பரியப்படி, உண்மையான சிலுவை மூன்று வித்தியாசமான மரங்களில் இருந்து செய்யப்பட்டது. அவை கேதுரு, பைன் மற்றும் சைப்ரஸ் மரங்களாகும். திருவிவிலியத்தில் எசாயா இறைவாக்கினரின் நூலில் 60:13ல் காணும்
“லெபனோனின் மாட்சிமை உமக்கு வந்து சேரும், தேவதாரு, ஊசியிலை தேவதாரு, ஊசியிலை சைபிரசு ஆகிய மூன்று மரங்கள் உமது தி்ருசன்னிதானத்திற்கு அழகு ஊட்டும், நான் எனது கால்கள் இருக்கும் இடத்தை புகழ் மிக்கதாகவும் ஆக்குவேன்” என்பதில் கால்கள் இருக்கும் இடம் என்பது சிலுவையில் ஆணி கொண்ட கால்கள் தங்கிட இருக்கும் தாங்கு பலகை எனப் பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறுவர்.
மற்றொரு பாரம்பரியக் கதைப்படி, உண்மையான சிலுவை உண்மையில் ஒரே இடத்தில் வளர்ந்த மூன்று மரங்களில் இருந்து செய்யப்பட்டது. இதனை ஒரு பாரம்பரிய சித்திரம் சித்தரிக்கிறது. ஆபிரகாமின் தமக்கை மகனான லோத்து என்பவர் இந்த மரங்கட்கு தண்ணீர் ஊற்றுவது போல் அந்தச் சித்திரம் உள்ளது. இந்த புராதனக் கதைப்படி, இந்த மூன்று மரங்களும் ஜெருசலேமில் கோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன.(எசாயாவின் ‘எனது சன்னிதானத்தை அழகு படுத்த”) பின்னர் ஏரோது மன்னன் இந்தக் கோயிலை மறு நிர்மாணம் செய்தபோது, இந்த மூன்று கட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டு முடிவில் சிலுவை செய்யப் பயன்படுத்தப்பட்டன. (”கால்கள் இருக்கும் இடத்தை புகழ் மிக்கதாகவும்”)
கி.பி 380 இல் வாழ்ந்த் சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகுஸ் என்பர் முன்னர் கூறிய, ஓரஜினின் கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில் புனித ஹெலெனா எனும் கான்ஸ்டண்டைன் மன்னரின் அன்னையே உண்மையான சிலுவையக் கண்டு பிடித்தவரென்றும், அதற்கென மிகவும் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த ஒரு பெண்மணி இந்த மூன்றாவது சிலுவையைத் தொட்டதும் பூரண குணமானார் என்றும் அங்கு கண்டு பிடித்த ஆணிகளை அவர் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு அனுப்பி வைத்தார் என்றும் அங்கு அவை பேரரசின் தலைக் கவசத்தில் பொருத்தப்பட்டும், குதிரையின் கடிவாளங்களில் சேர்க்கப்பட்டும் விட்டது என்றும் கூடுதல் செய்திகளைத் தருகிறார்.
’நார்னிய நாளேடுகள்’ என்ற தலைப்பில் குழந்தைகள் இலக்கியம் படைத்த, நாவல் ஆசிரியரும், கவிஞரும், பேராசிரியரும், இறையியல் வல்லுநரும் ஆகிய க்ளைவ் ஸ்டேப்பில்ஸ் லூயிஸ் (சி.எஸ். லூயிஸ்) (29-11- 1898- 22-11-1963) ’நான்கு அன்புகள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.
“தனக்கென எதுவும் தேவை இல்லாத கடவுள், இருக்கும் வகையில் அன்புடன் இருந்து, மிகவும் சாதாரண படைப்புகளின் மீது அன்பு கொண்டு அவற்றை பரிபூரணம் ஆக்குகிறார். அவர் பிரபஞ்சத்தை ஒரு முன் நோக்கலில் படைத்து அல்லது நோக்கிக் கொண்டு எனச் சொல்லலாமா, ஏனெனில் கடவுளுக்கு காலம் என்பது இல்லை- சிலுவையைச் சுற்றிலும் இஸ்ஸ்ஸெனப் பறக்கும் ஈக்களின் மேகக் கூட்டத்தையும், கரடு முரடான கொம்பில் சாய்ந்தால் சாய இயலாத நொந்து போன முதுகையும், மீட்கும் நரம்புகளில் தைக்கப்பட்ட பெரும் ஆணிகளையும், உடல் தொங்குவதில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மூச்சுத் திணறலும், உடல் கணம் முழுவது தாங்கும் புறங்கைய்களில் திரும்பத் திரும்ப ஏற்படும் சித்திரவதையான வலியும், மூச்சுக்கென, மேலெழும் உடலும், அந்த உடற்கூற்றின் வரைபடத்தை நான் தைரியமாகக் கூறினால், கடவுள் ஒரு “விருந்தளிப்பவர்” ஏனெனில் அவர் விரும்பியே தன் உடலில் ஒட்டுண்ணிகளைப் படைத்தார். அவ்வாறு செய்ததன் மூலம் நாம்”அக்கிரமம் செய்யவும் அவரை நமது சுய லாபத்திற்கு பயன்படுத்தவும் விட்டுள்ளாரே. இங்கேதான் இருக்கிறது அன்பு. இதுவே, அன்பின் வரைபடம். அவரே, அனைத்து அன்பையும் கண்டு பிடித்தவர்” என்று சிலுவையில் தொங்கும் யேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுகிறார்.
திருவிவிலியத்திற்கு அடுத்தபடியாக மிகவும் படிக்கப்படும் நூல் ஆகிய கிறிஸ்துநாதர்
அநுசாரம் எனப்படும் “தி இமிடேஷன் ஆஃப் க்ரைஸ்ட்” எழுதிய தாமஸ் ஏ கெம்பிஸ், இந்த நூலில் இரண்டாம் பாகத்தில் 12ஆம் அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகிறார்.
“அதன் மூலம் நீ ஒரு அரசாட்சியை பெற இயலும் என்றாலும் ஏன் சிலுவையை சுமக்கப் பயப்படுகிறாய்?. சிலுவையில் மீட்பு இருக்கிறது; சிலுவையில் வாழ்வு உள்ளது; சிலுவையில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு இருக்கிறது; சிலுவையில் விண்ணக இனிமை நம்மில் நுழைகிறது; சிலுவையில், மன உறுதி கிடைக்கிறது; சிலுவையில் ஆவியில் மகிழ்ச்சி உண்டாகிறது; சிலுவையில் உயரிய புண்ணியம் இருக்கிறது; சிலுவையில் பரிபூரண புனிதம் உள்ளது. ஆன்மாவுக்கான மீட்பும், நிலை வாழ்வும் சிலுவையால் மட்டுமே கிடைக்கும்”.
“சிலுவையே மணிமகுடம்” என முரண்பாடான தத்துவத்தை இந்த அடையாளம் போதித்தாலும் திருவிவிலியத்தின் பயண நூல் 20:4,5:1 மற்றும் 1 கொரிந்தியர்10:14 இல் உள்ளபடி உருவ வழிபாடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ஆதலால், அவமானத்தின் சின்னம் ஆகிய சிலுவை பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் இல்லங்களில் கூட வைக்கப்படாமல் , சிலுவை வைத்தால் துன்பம் வரும் என்ற மூட நம்பிக்கையிலும் அதற்கு உரிய சிறப்பினை செய்வதில்லை.
இவ்வாறு கடவுளைப் பற்றி பேசும் மனிதர்கள், ஆன்மாவுக்கான மீட்பும், நிலை வாழ்வும் சிலுவையால் மட்டுமே கிடைக்கும்”. என்று ஆன்மாவின் மீட்பு பற்றிப் பேசுவதால், அதிலும் அவை இந்த அடையாளங்கள் வழியாகக் கிடைப்பதாகப் பேசுவதால் இந்த அடையாளங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது.
(வளரும்)