மெல்லிசை மன்னர்

சாகா வரம்பெற்றப் பாடல்கள் தந்தாயே.
ஆஹா பிரமாதம் என்றோமே – மாகாயம்
தந்தெம்மை விட்டுப் பிரிந்தாயே! மெல்லிசை
அந்தலோகம் கேட்கும் இனி.

பத்துமாத சித்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தை
மொத்தமாய் சித்த்ரகுப்தன் வாங்கினான். –வித்தகத்தை
குத்தகைக்கு வாங்கிக் கொடுத்த நிலைபோலே
பித்தாகி நின்றோம் பிணித்து.

காலதேவன் கானசபைக் கச்சேரி செய்தற்கு
சாலச் சிறந்தவர் என்றழைக்க –ஆலவட்டம்
எங்களைக் கண்ணீர் குளிக்கவிட்டு போனாயோ
அங்கிசை மென்மை எடுத்து

பாடல் வரிசிலைகள் பாங்காய் இசைத்தேரில்
ஊடலுடன் ஊர்வலம் போவதற்கு –தேடலின்
தித்திப்பை அள்ளித் தெளித்திட்ட மெல்லிசை
மொத்தமும் உந்தன் முனைப்பு.

மறைந்தாலும் நெஞ்சம் மறக்கா இசையால்
நிறைந்து நிலைத்தே பனிபோல் –உறைந்து
உலவிடும் காற்றில் உயிவாழும் மன்னா
நிலவென் றிருப்பாய் நிறைந்து.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jul-15, 1:34 am)
Tanglish : mellisai mannar
பார்வை : 49

மேலே