பட்டணத்து மழை

பட்டணத்தில் பெய்யும் மழைக்கு
பெயர்கள் இல்லை
கட்டிடங்களைக் கழுவி வடியும் தூறல்கள்
காய்ந்தே நிலம் தொடுகின்றன
பெருமழையாய் இருப்பின்
வீதி தொடும்முன், காற்றின் புகை கரைத்து
கசாயம் செய்கின்றன
வீதி தொட்டபின், கழிவுகளின் வாசம் சுமந்து
மணம் மாறுகின்றன

இந்த பட்டணத்து மழையில் மையல் கொண்டு,
கைவிரித்து தட்டான் சுற்றி,
கதாநாயகியாகும் ஆசையில்லை எனக்கு
வீதி நிறைத்தோடும் அதில்,
கால் கொண்டு, நீர் செதுக்கி
குழந்தையாகும் எண்ணமுமில்லை எனக்கு

மண்ணின் வாசத்தை
மழையின் வாசமாக்கி
கவிதை சமைக்கும் கற்பனையுமில்லை எனக்கு

பட்டணத்திற்கு பெருமழை பொருத்தமில்லை
பெருமழைக்கும் பட்டணம்
பாந்தமில்லை

எழுதியவர் : அகிலா (20-Jul-15, 10:03 am)
சேர்த்தது : Ahila
Tanglish : pattanathu mazhai
பார்வை : 525

மேலே