தாகம்
வெண்கடல் மீதுதன்
கால்மிதித் தோடிநல்
நீர்ச்சுனை ஏதெனத்
தேடிடும் ஒட்டகத்
தாகமா யைம்புலன்
ஏங்கிடத் தேடிடக்
கிட்டிடும் கட்டறு
ஞானம தே!
***
சங்கினுள் ஓங்கிடும்
பொங்கலை ஓசையை
எங்கனம் யாரதுள்
வைத்தன ரோபெரும்
ஞானமும் தோன்றுதல்
அவ்வித மேஅதை
வைத்ததைப் பெற்றவர்
கண்டில ரே!
***
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
கொண்டையின் ஊசிபோல்
சிற்றொட ராயினும்,
தொண்டையில் நீகொளத்
தேடிடும் ஆழியின்
பொங்கலை நீரது
நீயுணர் வாய்!
***
உண்பதும் உண்டபின்
உறங்குதல் மேலிட
புணர்வதும் புணர்ந்ததும்
பெருங்கடல் வீழ்ந்ததில்
துன்பமே துன்பமே
என்றிவர் கூக்குரல்
கேட்கையில் பொங்குது
பெருநகை யே..!
***
-உடல்
உண்பதும் பின்னயர்ந்
துறங்குதல் செய்வதும்
ஊனிதைக் காத்திடல்
வேண்டுமென்றப் பெரும்
உண்மையை உள்ளதில்
உதிக்கவைத் தால்பெரும்
வல்லமை உண்மையில்
வந்திடு மே..!!
***
வல்லமை கொண்டபின்
கண்டது யாதென
உந்துத லோடெனைக்
கண்டுநீ கேட்டிடின்
உய்த்தருள் மெய்ப்பொருள்
கண்டிட வல்லுடல்
உண்மையில் நல்வழி
நல்கிடு மே!
**************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.