இன்னமும் பெய்யவில்லை இங்கே வெளிச்சங்கள்

பறவைகள் கூடு கட்டாத
எம் நிலங்களின் தேகமெங்கும்
அரங்கேறுகிறது சாதிக் கூத்து.

மழை பெய்து நிரம்பாத கிணறுகளில்
கல் பெயர்ந்து...முளைத்த சிறு மரங்களில்
படிகிறது சாதி எச்சிலின் ஆதித் துளி.

உறைந்த நீரெனச் சரியும்
காதலின் முற்றத்தில்..
நீலம் குடித்த மலர்கள்
இறுதியின் மகுடியில் சாய்ந்தாட...
வஞ்சிக்கப்பட்ட அன்பு...
இடுக்குகளிலிருந்து முகிழ்த்து
மூச்சுத் திணறுகிறது.

பிரியும் கணம் தாங்காது...
புதைந்த கண்ணிவெடியென
பதற்றமடைகிறது உணர்வுகளின் வெப்பம்.

இடம் பெயரும் நிலவு
கோடையின் சுழலாய் மேலெழும்ப
உயிர்கள் எப்போதோ உருகியிருந்தன.

ஒரு துன்பியல் சித்திரமென
தாழைக் காட்டின் வாசனையோடு
சிதறுகிறது பூமிப் பிஞ்சு.

இறுதி முத்தங்களின் சப்தம் தொலைந்துவிட
இன்னமும் பெய்யவில்லை வெளிச்சம்
மனிதர்கள் கடந்து செல்லும் நிலங்களில்.

அடைக்க அடைக்கப் பீறிடுகிறது
துயரத்தின் ஊற்றுக்கண்.

எழுதியவர் : rameshalam (21-Jul-15, 8:05 pm)
பார்வை : 5816

மேலே