சினம் காப்பான் யார்
சினம் காப்பான் யார்?
===============
மேலாளர் ருத்திரமூர்த்தி , தன் பெயருக்கு ஏற்றவாறு ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்.
சப்த நாடியும் ஒடுங்கிப்போய் , கைகட்டி, வாய்பொத்தி சரவணன் , அவருக்கு முன்பாக நின்றுகொண்டு இருந்தான்.
" ஹெட் ஆபீசுக்கு அனுப்பவேண்டி , ஒரு லெட்டர் டைப் பண்ணச் சொன்னால் இத்தனை தப்பா?
எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்! Dear Sir ன்னு அடிக்கிறதுக்குப் பதிலா Deer sir ன்னு அடிச்சிருக்கீங்க!
ஏய்யா! ஒரு amount ஐ Figur லேயும் Wordings லேயும் காட்டும்போது இரண்டும் ஒன்னா இருக்கணும்ன விஷயம் கூடவா உனக்குத் தெரியாது?
figur ல Rs 2450000 ம்னு காட்டிட்டு Wordings ல ( Rupees Twenty four lakhs fifteen thousand only ) ன்னு அடிச்சிருக்கீங்க? மீதி முப்பத்தைந்தாயிரம் உன் பாக்கெட்டிலிருந்து குடுப்பியா?
லெட்டர் டைப் பண்ணவுடனே அதை ஒரு தடைவைக்கு நாலு தடவை திருப்பிப் படிச்சிப் பாக்க வேண்டாமா? ஏய்யா! பத்தாம் கிளாஸ் படிக்கிற பையன் கூட பரீட்சை எழுதி முடிச்ச உடனே ஆன்சர் பேப்பரை நாலுதரம் திருப்பிப் படிச்ச பின்னாடிதானே கொடுக்கிறான் ? அந்த அறிவு உனக்கு ஏன் இல்லாம போச்சு?
ஒன்பது மணி ஆபீசுக்குப் பத்து மணிக்கு வர்றீங்க! ஏன் லேட்டுன்னு கேட்டா ? யாதாச்சும் நொண்டிச் சாக்கு சொல்லவேண்டியது! ஆபீசுக்கு லேட்டா வந்தாலும் ஒழுங்கா வேலை பாக்குறது இல்ல! இங்க வந்துதான் வீட்டுக் கதை, ஊர்கதை, டி.வி. சீரியல் கதைன்னு பேசி அரட்டை அடிக்கவேண்டியது. 11 மணி ஆன உடனே பஜ்ஜி, காபி சாப்பிட கேண்டீனுக்கு ஓடவேண்டியது! ஏய்யா! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்: நீ பண்ற தப்புக்கெல்லாம் சேர்த்து உன் சம்பளத்துல ஒரு நூறு ரூபா குறைச்சுக் கொடுத்தா வாங்கிக்குவியா? வாங்கமாட்டெல்ல! அதே மாதிரிதான் நீ வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன்! இது கடைசி தடவையா இருக்கட்டும்; இனிமே இதுமாதிரி தப்பு செஞ்சா நான் மெமோ issue பண்ணி Explanation call for பண்ணி , ஒரு increment கட் பண்ணிடுவேன். Be Careful . இந்த லெட்டரை இப்படியே நான் அனுப்புனா ஹெட் ஆபீசுல என் மூஞ்சிமேல காரித் துப்புவான். இத ஒழுங்கா டைப் பண்ணிக் கொண்டுவா ! " என்று சொல்லி அந்த லெட்டரை சரவணன் முகத்தில் விட்டெறிந்தார் ருத்திரமூர்த்தி.
சரவணன் நிலைமை, நாய் குதறிய கந்தல் துணிபோல ஆகிவிட்டது.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீடு வந்து சேர்ந்தான்.
சரவணனைப் பார்த்தவுடன் அவன் மனைவி மீனாட்சி, " ஏங்க இவ்வளவு லேட்டு? இன்னிக்கி சினிமாவுக்குப் போலாம்னு சொன்னீங்களே! கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா? " என்று கேட்டாள்.
" சினிமாவும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம்; போய் காபி கொண்டு வா!" - மனைவியிடம் எரிந்து விழுந்தான் சரவணன்.
" என்ன ஆயிற்று இவருக்கு? காலையில ஆபீசுக்குப் போகும்போது நல்லாத்தான இருந்தாரு ! " என்று எண்ணியவாறு சமையற் கட்டுக்குள் நுழைந்தாள். காபியைக் கலந்து எடுத்துக்கொண்டு வந்து சரவணனிடம் கொடுத்தாள்.
காபியைக் குடித்த சரவணன் , " தூ! " என்று துப்பினான். " காபியா இது? இத மனுஷன் குடிப்பானா? கழனித் தண்ணி மாதிரி இருக்கு; கொண்டுபோய் மாட்டுக்கு ஊத்து! " என்று சொல்லி காபி டம்ளரைக் கடாசி எறிந்தான்.
வெலவெலத்துப் போனாள் மீனாட்சி. கண்களைக் கசக்கிக் கொண்டே படுக்கை அறைக்கு உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.
தெருவிலே சரவணன் ,மீனாட்சி தம்பதியினரின் ஐந்து வயதுக் குழந்தை விஜயா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தெருவிலே பஞ்சு மிட்டாய் விற்பவன் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த குழந்தை விஜயா , " அம்மா! அம்மா! எனக்குப் பஞ்சு மிட்டாய் வாங்கிக் குடும்மா! " என்று கேட்டுக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள்.
" சனியனே! பிரிட்ஜுல பிஸ்கட், சாக்லேட் எல்லாம் இருக்கு! அத எடுத்து சாப்பிடு! "
" இல்லம்மா! எனக்குப் பஞ்சு மிட்டாய்தான் வேணும் ! வாங்கிக் குடு! " குழந்தை அடம் பிடித்தாள்.
வேகமாக எழுந்து வந்த மீனாட்சி , குழந்தையின் முதுகில் ஓங்கி அறைந்தாள். " ஒரு தடவ சொன்னா கேட்கணும். போ! வீட்ல இருக்குறத சாப்பிடு! அடம் பிடிக்காதே ! " என்று சொன்னாள்.
குழந்தை விஜயா அழுதுகொண்டே வெளியே வந்தாள். அவளது செல்ல நாய்க்குட்டி ஜுஜுபி , தன் எஜமானி அழுதுகொண்டே வருவதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தது. வாலை ஆட்டிக்கொண்டே அவள் அருகில் சென்று , எம்பி அவளது முகத்தை நக்கியது.
' சீ போ ! " என்று சொல்லியவாறே விஜயா , ஜுஜுபியின் வயிற்றில் எட்டி உதைத்தாள்.
" வீல் " என்று கத்தியவாறே ஜுஜுபி ஓடிச்சென்று ஒரு மூலையில் முடங்கிப் படுத்துக் கொண்டது.
" பாவம் ஜுஜுபி ! தன் கோபத்தை யார்மீதும் காட்ட அதற்குத் தெரியவில்லை!
குறள்:
=======
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கில்என் காவாக்கால் என்.
கருத்துரை: தன் கோபம் எங்கே செல்லுபடி ஆகிறதோ, அங்கே காட்டாமல் அடக்கிக் கொள்பவனே சினம் காப்பவன் ஆவான்; அதைவிடுத்து செல்லுபடி ஆகாத இடத்தில் கோபத்தைக் காட்டினால் என்ன காட்டாவிட்டால் என்ன!
நன்றி ;M.Jagadeesan