ஊழின் விளையாட்டு
ஊழின் விளையாட்டு.
===============
அடையா நெடுங்கதவு என்பார்களே, அதுபோல பொன்னம்பலச் செட்டியாரின் வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவருடைய வீட்டில் அடுப்பு 24 மணிநேரமும் எரிந்துகொண்டே இருக்கும்.உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் விருந்தாளிகள் வருவதும், போவதுமாயிருப்பர். கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை கேட்டு வருவோரும், அநாதை இல்லங்கள் மற்றும் முதியோர் காப்பகங்களுக்காக பொருளுதவி கேட்டு வருவோரும், குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக உதவி கேட்டு வருவோரும், தங்களுடைய அருமை மகளின் திருமணச் செலவுக்காகப் பொருளுதவி கேட்டு வருவோரும், பிரசவச் செலவுக்காகப் பொருளுதவி கேட்டு வருவோரும், மருத்துவ மனையில் நடக்க இருக்கின்ற அறுவை சிகிச்சைக்காகப் பொருளுதவி கேட்டு வருவோருமாகப் பொன்னம்பலத்தின் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். எல்லோருடைய குறைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்து , அவர்களுக்குத் தக்க உதவிகளை செய்து அனுப்புவார் பொன்னம்பலம்.
இதுதவிர வீட்டுக்கு அருகிலேயே மிகப்பெரிய கீற்றுக் கொட்டகை அமைத்துத் தினமும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அவருக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து வாடகைப் பணமும், வியாபார நிறுவனங்களிலிருந்து வருவாயும் வந்துகொண்டே இருந்தன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல, அவர் செலவு செய்ய செய்ய , வருவாய் குவிந்துகொண்டே இருந்தது. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ என்பதுபோல , அவரது கழனிகள் , விதைக்காமலே விளைச்சலைத் தந்துகொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எதிர்வீட்டு ஏகாம்பரம் பொறாமையினால் புழுங்கித் தவித்தார். பொன்னம்பலம் காசைக் கண்டபடி செலவு செய்கிறானே என்று எண்ணி மனம் குமைந்தார். காசின் அருமை தெரியாதவன் என்று பொன்னம்பலத்தை ஏசுவார்.ஏகாம்பரம் சிக்கனவாதி என்று சொல்வதைக் காட்டிலும் , " கருமி " என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எச்சில் கையால் காக்கையை மட்டுமல்ல; ஒரு குருவியைக் கூட ஓட்டமாட்டார். இரும்புப் பெட்டி நிறைய தான் சேர்த்துவைத்த ரொக்கத்தை தினமும் எண்ணிப்பார்த்து மகிழ்வார். தங்க நகைகளைத் தன் மனைவிக்கு சூட்டி அழகு பார்ப்பார். பிறகு பத்திரமாக பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுவார். தன் கணவனுக்கு ஏற்ற பதிவிரதையாக , ஏகாம்பரத்தின் மனைவியும் சிக்கனச் செல்வியாக வாழ்ந்துவந்தாள். வீட்டைவிட்டு எங்கும் போகமாட்டார் ஏகாம்பரம். ஏதேனும் விசேஷத்துக்கு செல்வதாக இருந்தால்கூட , கணவன், மனைவி இருவரில், ஒருவர் மட்டுமே செல்வர்; மற்றவர் இரும்புப் பெட்டிக்கு அருகிலிருந்து களவு போகாமல் காவல் காப்பர்.
ஒருநாள் ஏகாம்பரம் வீட்டிற்கு சாம்பிராணி புகை போடுபவன் ஒருவன் வந்தான். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீடு வீடாகச் சென்று சாம்பிராணி புகை போட்டு காசு வாங்குவது அவனுடைய வழக்கம். அவனை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை ஏகாம்பரம்.
" ஐயாவுக்கு நல்ல காலம் வரப்போகுது; இந்த வீட்டுக்குள் சில கெட்ட ஆவிகளின் நடமாட்டம் உள்ளது; அவற்றையெல்லாம் ஓட்டிவிட்டால் ஐஸ்வரியம் கொட்டோகொட்டென்று கொட்டப் போகிறது. "என்று சொன்னான். இதைக்கேட்ட ஏகாம்பரம்," அப்படியா! " என்று ஆச்சரியப்பட்டார்.
" ஆமாம் சாமி! கெட்ட ஆவி, ஏவல், பில்லி சூன்யம் எல்லாத்தையும் புகை போட்டே நான் விரட்டிடுவேன். அப்புறம் இந்த ஊருக்கே நீங்கதான் ராஜா! " என்று சொல்லி ஆசைகாட்டினான் சாம்பிராணி ஆசாமி!
" அப்படின்னா உள்ள வா! எல்லா ரூமுக்கும் நல்லா புகை போடு; கெட்ட ஆவிகள் எல்லாம் போகட்டும்; நிறைய சொத்துபத்து சேரட்டும். " என்று சொல்லி அவனை வீட்டுக்குள் அனுமதித்தார்.
உள்ளே வந்த சாம்பிராணிக்காரன் நெருப்பில் சாம்பிராணி தூவி புகை போட ஆரம்பித்தான். ஒவ்வொரு அறையாகப் போட்டுக்கொண்டே வந்தான். இரும்புப்பெட்டி இருந்த அறைக்குள் வந்தான். இரும்புப் பெட்டிக்கு புகை போடுமாறு ஏகாம்பரம் அவனைக் கேட்டார். அறை முழுவதும் புகை மெல்ல மெல்ல மண்டியது. ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு புகையின் அடர்த்தி அதிகமாகியது. திடீரென்று சாம்பிராணிக்காரன் மயக்கப் பொடியை நெருப்பில் தூவி ஏகாம்பரம் தம்பதியினர் முகத்தில் படுமாறு நன்றாக விசிறி விட்டான்.அவ்வளவுதான் தம்பதியினர் இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டனர்.
ஒருமணி நேரம் கழிந்திருக்கும். ஏகாம்பரம் தம்பதியினர் கண் விழித்தனர். லபோதிபோ என்று அடித்துக்கொண்டு , எழுந்துசென்று இரும்புப் பெட்டியைப் பார்த்தனர். இரும்புப்பெட்டி திறந்து கிடந்தது; ரொக்கமும், தங்க நகைகளும் திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். குருவிபோல சேர்த்த பணமும், நகையும் போயிற்றே! என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர்; கீழே விழுந்து புரண்டனர்.
குறள்;
=====
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. ( ஊழ் -376 )
பொருள்:
========
ஒருவனுக்கு நல்ல காலம் வந்தால் , அவனிடம் சேர்ந்த செல்வம் அவனைவிட்டு எளிதில் போகாது;கடலிலே போய்க் கொட்டினாலும் செல்வமானது குறைவுபடாமல் பெருகிக்கொண்டே இருக்கும். ஆனால் ஊழ்வினை காரணமாக ஒருவனுக்குக் கெட்ட காலம் வந்தால், எவ்வளவுதான் கட்டிக் காத்தாலும் , அவனிடம் உள்ள செல்வமானது , சொல்லாமல், கொள்ளாமல் அவனைவிட்டுப் போய்விடும்.
பால்= ஊழின் பல பெயர்களுள் இதுவும் ஒன்று.
நன்றி ;M.Jagadeesan