ஓட்டைப் படகு
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது.
உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,
"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.
" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "
" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "
" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"
" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )
" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "
" அது என்ன வழி ? "
" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )
அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."
" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"
உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "
" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "
" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "
ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.
" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "
நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.
நன்றி ;M.Jagadeesan