துளசி ராகம் – கே-எஸ்-கலை

மகளென்ற உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !

பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?

விண்மீன்கள் பலகோடி நெஞ்சினில் – வந்து
விளையாடும் வரமொன்று எட்டினேன் !
கண்மணியாள் மகளோடு களிப்பினில் – இன்று
கடலொக்க கரைத்தாண்டி முட்டினேன் !

இன்பத்தில் எகிறிக் குதிக்கிறேன் – அந்த
இமயத்தைக் குனிந்துப் பார்கிறேன் !
மஞ்சத்தின் மல்லிகை அள்ளியே – என்
நெஞ்சத்தில் மாளிகை அமைக்கிறேன் !

மாணிக்க மரகத முத்தெல்லாம் – அவள்
மலர்முகம் நோக்கையில் வெட்குமே !
மல்லிகை முல்லை மலரெல்லாம் – எந்தன்
மழலையின் முன்வீழ்ந்து தோற்குமே !

கைதொட்டால் பண்பாடும் கருவியாய் – நெஞ்சு
கணப்பொழுதில் மாறிவிடும் உறுதியாய் !
பூதொட்டால் புண்ணாகும் மென்மையாள்- அவள்
புன்னகைத்தால் தேன்பொழியும் அருவியாய் !

செந்நாவில் தேன்வடித்துச் சிணுங்கிட– பெரும்
செருக்குண்ட வீணைகள் அடங்குமே !
கள்ளுண்ணும் தேன்வண்டுப் பட்சிகள் – கவின்
கலைமகளின் உதட்டோரம் இரக்குமே !

மழலையவள் கால்பதியும் இடமெலாம் – இனி
மலரெல்லாம் மலரும்திரு தோட்டங்கள் !
மாண்புடையாள் மடிச்சுமந்த பிள்ளையால் – என்
மனசெல்லாம் பட்டாம்பூச்சிக் கூட்டங்கள் !

அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
சகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !

சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !

எழுதியவர் : கே-எஸ்-கலை (25-Jul-15, 8:52 am)
பார்வை : 142

மேலே