ஓயாதே உறங்காதே
ஓயாதே உறங்காதே உச்சம் தொடும்வரை - நீ
உலகத்துக்கே வழியைக்காட்டும் புதிய தலைமுறை
முயற்சித்து மேதிப்பாரு உன்னால் ஆனவரை - தினம்
பயிற்சிசெய்து வெல்லமனதில் வேண்டும் அக்கரை
தங்குதடை வாழ்க்கையிலே தானாய் வருவது - அன்று
திருக்குறளும் தடைவென்றே அரங்கம் கண்டது
ஆயிரம்முறை தோற்றுதான்மின் சாரம் வந்தது - எதற்கும்
அஞ்சிநின்றால் உடலில்உணர்ச்சி ஏன்தான் உள்ளது
வெறிகொண்ட வேங்கையாக வீரத்தைக் காட்டு - நீ
வெடித்துசிதறும் வெடிகுண்டாய் காரியம் ஆற்று
புயல்கொண்ட வேகத்தை செயலினில் காட்டு - நீ
பொங்கிவரும் புதுப்புனலாய் அச்சத்தை நீக்கு
வில்லாக வளைந்து உடலின்வேர்வை சிந்திடு – அதை
வேர்வரையில் பாய்ச்சி வெற்றிபயிர் விளைத்திடு
சிந்தைநரம்பை தூண்டித்தூண்டி அறிவை செதுக்கிடு - ஆட்டு
மந்தைப்போல தலையைஆட்டும் குணத்தை மாற்றிடு
பத்தாம்பசலி தனத்தை யெல்லாம் படகில்ஏற்றிடு - நீ
புத்தம்புதுக் கொள்கைக் கெல்லாம் கைகொடுத்திடு
ஆகமொத்தம் உந்தன்நிலை உயர உழைத்திடு - நீ
அடுத்தவர்க்கும் வாழுகின்ற வழியைக் காட்டிடு
போதுமென்ற எண்ணம்உன் உயர்வை தடுத்திடும் - நீ
பொங்கியெழுந்து புறப்பட்டால் தடைகள் நொறுங்கிடும்
சமயம்பார்த்து செயல்செய்தால் எதுவும் கிடைத்திடும் - உனக்கு
சரித்திரத்தில் இடம்கிடைத்து புகழும் சேர்ந்திடும்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்