உறங்காதே சூரியனே

ஓய்ந்து உறங்காதே சூரியனே! - நீ
ஓய்ந்தால் ஓய்ந்திடும் காரியமே!
சோகம் தாங்கிடும் வாலிபனே!- உன்
சுறுசுறுப்பால் வரும் வீரியமே!

உச்சிநிலை பெற ஆசைவைத்தால் - உன்
ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும்
ஒவ்வொரு நொடியும் பயன்படுத்த - உன்னை
உச்சம் தேடிவந்து வெடிவெடிக்கும்

உச்சம் உடலுக்கு வாலிபமே! -அதில்
அச்சப் பட்டால்நீ பூவினமே!
மிஞ்சும்திறனை வளர்த்துக் கொண்டால்- உன்னைக்
கெஞ்சிவரும் அந்த கோஇனமே!

லோலோ என்று அலைபவர்கள் - எந்த
லாபமும் இன்றி அலைவதில்லை
வாழ்வின் பயணமே ஆதாயம் - நீ
வாடிநின்றால் வரும் சேதாரம்

இருளும் விலகி ஒளியாகும் - நீ
இமை மூடாமல் செயல்பட்டால்
வரவும் வளர்ந்து மலையாகும் - நீ
வழியை அறிந்து பாடுபட்டால்

வீணை அழகாய் இருந்தாலும் - அதில்
விரல் பட்டால்தான் கீதம்வரும்
அறிவும் உருவும் வளர்ந்தால்தான் - உன்
அன்னைக்கும் அது பெருமைதரும்

பழைய பாட்டைகள் பலவுண்டு - நீ
புதிதாய் பாட்டைகள் போட்டுவிடு
பாட்டைகள் போட்டோர் பாட்டையிலே - நீ
பயணம் செய்தாலும் பலனுண்டு

சுமையாய் நீயும் இல்லாமல் - அட
சுகமாய் இருப்பாய் பூமியிலே
சுமக்கும் தோள்கள் உனக்குண்டு - எதையும்
சுமக்கத் துணிந்தால் சுகமுண்டு.

எழுதியவர்
புலவர். சொ.பாஸ்கரன்

எழுதியவர் : (25-Jul-15, 10:04 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 60

மேலே