பொறாமை-முஹம்மத் ஸர்பான்

உள்ளமெனும் கண்ணாடியில் விழுகின்ற பொய்விம்பங்கள்
வன்மத் தாகம் தீர்க்கும் கானல் நீராகும்.
பள்ளத்தில் தவழ்ந்து கள்ளத்தில் எழுந்து நிற்கும்.
முகத்தில் புன்னகைக்கும்;இதழில் இனிக்கும்;மனத்தால் அறையும்

பொறாமை எனும் சமுத்திரத்தில் அக்கினிச் சுவாலைகள் திரைகள்
ஆயிரம் கிளை வாழ்க்கை விருட்சத்தில் விளைந்த ஓர் நஞ்சுக்கனி
ஆறாத புண்ணில் ஒத்தட மிடுகின்ற கள்ளியில் பூத்த முட்கள்.
உள்ளத்தில் கொட்டப்பட்டு மெளனமெனும் இதழில் அடைக்கப்பட்ட வசைகள்.

நான்கு வேத நூல்களிலும் புரட்டப்படாத சிகப்பு பக்கங்கள்.
வாழ்க்கை பாதையில் பாவம் சேர்க்கும் சிலுவை பயணங்கள்
மூர்ச்சையான பின்பும் உன்னோடு வருகின்ற பாவச்சுவைகள்.
சிந்தையை கொன்று மனச்சாட்சியோடு யுத்தம் செய்கின்ற அரக்கன்.

தனக்குத் தானே தோண்டப்படுகின்ற சவக்குழிகள்.
பாடையில் தேகம் கழுவியும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகள்.
அருவி ஓடிடும் கரடுமுரடான பாதை நீர் வீழ்ச்சி
பொறாமை எனும் நஞ்சு உதிரத்தில் ஓடினால் நீ வீழ்ச்சி

மனச்சாட்சியின் ஒரு முகம் சிதறிய உள்ளத் துண்டுகளில்
மோகத்தை வண்ணமாக்கி தாகத்தை குருடாக்கும்
எண்ணத்தை முடக்கி தன் பேச்சை கேட்கும் படி ஏவும் சாத்தான்
அவன் மனதோடு எழுதும் கடிதத்தில் பாவங்கள் முத்திரைகள்

எண்ணமெனும் பால் வீதியில் தூசி படிந்த ஒட்டடைகள்
அமுதமாய் இனிக்கும் தேனிலும் கசக்குகின்ற அடி இதழ்
அகிலத்தில் பிறந்த எண்ணற்ற உள்ளங்கள் ஒன்றிணைக்கும்
அருவியில் தினந்தோறும் ஓடுகின்ற திரைகள் பொறாமை

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-Jul-15, 9:36 am)
பார்வை : 159

மேலே