பொங்கு ஊது சங்கு
தமிழினம் தழைத்திட வேண்டும் – இந்த
தாரணி முழுமையும் வழுத்திட வேண்டும் !
இமைகளும் கிழித்திட வேண்டும் – இங்கே
ஏறிடும் பகைமையை அழித்திட வேண்டும் !
என்றுமே பொங்கு ! நின்றே ஊது சங்கு !
செவ்வயல் செழித்திட வேண்டும் – தலை
நீட்டிடும் கலையெலாம் எடுத்திட வேண்டும் !
நல்வழி நாட்டிட வேண்டும் – இந்த
நாட்டினில் தமிழொளிக் காட்டிட வேண்டும் !
என்றுமே பொங்கு நின்றே ஊது சங்கு !
பண்டையநிலை வர வேண்டும் - இந்த
பைந்தமிழ் மறவனின் உரம் பெற வேண்டும் !
மண்டிடும் புகழ் பெறவேண்டும் – இங்கே
மற்றவன் கோட்டையை அகழ்த்திட வேண்டும் !
என்றுமே பொங்கு ! நின்றே ஊது சங்கு !
கலைமனம் கமழ்ந்திட வேண்டும் ! ஒளி
காட்டிடும் மேன்மையில் திகழ்ந்திட வேண்டும் !
உலைகளும் பொங்கிட வேண்டும் ! – உழும்
உழவனுக் கின்பமும் தங்கிட வேண்டும் !
என்றுமே பொங்கு ! நின்றே ஊது சங்கு !