முனை கலாம் - கண்ணீர் அஞ்சலி
தென்கோடி பிறந்தவரே தேசமெல்லாம் ஆண்டவரே
என்கோவம் எம்மேல ஏன்விட்டுப் போனீரோ?
இயற்பியல் பாடம் கற்று ஏறும் விமானவியல்
மயக்கமற கற்றவனே மன்னவனே போனீரோ...
ஏவுகணை கண்டவரே எந்திரங்கள் செய்தவரே
பாவியெமைப் புலம்பவிட்டுப் பரமனடி போனீரோ...
முன்னிருந்த பிரதமரெலாம் முழுபொம்மை தானாக,
.....முதுகெலும்பு கொண்டவரே முழுநாட்டை நிமிர்ந்தவரே;
இன்னும்சில ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசா
.....இளைஞர்கள் ஆக்கிடவே இட்டுசெல நீயிலையே...
வரிப்பணத்தில் வீணாக வெளிநாடு சுற்றாமல்
குறிக்கோளைக் கருக்கொண்டு கடல்கடந்த கொள்கையரே,
செல்லும் இடமெல்லாம் சிறுவர்களை மாணவரை
வெல்லம் என எறும்பு மொய்ப்பது போல் ஈர்த்தவரே,
அறிவியல் படிப்பெல்லாம் அடுப்பங்கரை நெருப்பாக
கரியில் பொசுங்காமல் காத்தளித்த கண்ணியரே,
திரைப்பட நடிகர்களைத் தெய்வமெனக் கும்பிட்டத்
திரையிட்ட மனத்தையெலாம் திருப்பிவிட்ட திறமையரே,
உமைபோல் ஆகவேணும் ஊருலகம் போற்றவேணும்
நமைஈன்ற நாடிதற்கு நன்மைபல செய்யவேணும்
என்றக் கனவோடு ஏழைகளும் பிஞ்சுகளும்
நின்றுக் கொண்டிருக்க நீரெங்கே போனீரோ?
கண்கள் பனிக்குதையா, கரமெல்லாம் நடுக்குதையா
உந்தன் பிரிவேற்க உள்ளமது மறுக்குதையா...
நல்லாச் சிலகாலம் நானிலத்தில் வாழவிட்டு
அல்லா அழைத்துக்கொண்டான் அவனுக்கும் நீதேவை...
அல்லா அழைத்தாலும் அவனியிலே நீர்வாழ்வீர்
எல்லார் மனத்தினிலும் இனியவொரு நினைவாக...
எல்லார் மனத்தினிலும் இனியவொரு நினைவாக!