முள்
கண்ணோடு கண்பேசி கருத்தும் ஒன்றி
காதலித்தோர் எவர்பிரினும் பிரிவு முள்ளே !
வின்னோடு விளையாடும் காருக் காங்கே
வீசுகின்ற கொடுங்காற்று முள்ளே ! என்றும்
தன்னோடு உலவுகின்ற திங்களுக்கு
தான்கொண்ட கரும்புள்ளி முள்ளே ! நெஞ்சில்
என்னோடு வாழ்கின்ற அறியாமையும்
எடுத்திடவே நினைக்கின்ற முள்ளே யாகும் !
வறுமையிலே நீந்துகின்ற ஏழை வாழ்வில்
விளையேற்றம் முள்ளேயாகும் ! கொண்ட
பெருமையிலே திளைக்கின்ற மாந்தர்க்கு
பிழையான எண்ணங்கள் முள்ளே ! நல்ல
திறமையிலே உயர்ந்தவர்கள் பின்னர் சோம்பி
திரிந்துடுதல் முள்ளாகும் ! மேணி வாடி
சிறுமையிலே உழல்பவர்கள் ஆற்றல் கொண்டு
சிந்திக்க நிலைமுள்ளே என்னுவீரே !
பிறன்பொருளை வஞ்சிக்கும் கள்ளரெல்லாம்
பிடுங்கிவிட நினைக்கின்ற வேழம் முள்ளே !
வரும்பொருட்கள் எல்லாமும் சுருட்டிக்கொள்ளும்
வன்மூடர் வதைக்கின்ற நெருஞ்சிமுள்ளே !
இருப்பவரை ஏமாற்றி ஆட்சி யேறும்
இதயமிலா கட்சியினர் ரோசா முள்ளே !
அருஞ்செயல்கள் ஆற்றுகின்ற பாட்டாளிக்கு
அன்றாடம் காண்கின்ற வறுமை முள்ளே !
நல்லோரை மதிக்காதார் ஈச்சம் முள்ளே !
நந்தமிழைப் பழிப்போர்கள் தாழை முள்ளே !
பொல்லாரை வளரவிடல் எலந்தம் முள்ளே !
புவிதன்னில் உழைக்காமல் வாழ்வோர் முள்ளே !
இல்லாளாய் ஒருவனுக்கு வாழ்ந்து , நெஞ்சால்
இல்லாளாய் இருக்கின்ற பெண்ணும் முள்ளே !
நல்லோராய் வேடமிட்டு நாட்டை யேய்க்கும்
நாணயமோ இல்லாதார் நஞ்சு முள்ளே !