கனவுகள் கலாமாக
வீழாத விஞ்ஞானம்
விதையாகும் எந்நாளும்..!
அறிவியலை படைத்துவிட்டு
ஆன்மாவை பறக்கவிட்டாய்
எஞ்சியுள்ள இதயமெல்லாம்
ஏக்கத்தில் தவிக்கவிட்டாய்..!
சிந்தனையாம் உன்பேச்சு
சிகரமென உயர்ந்ததையா
சிந்தையதில் உதித்ததெலாம்
சிகரம்தாண்டி போனதையா..!
விஞ்ஞானம் மெய்ஞானம்
விலையுர்ந்த உன்ஞானம்
விதைபோட்டு வளர்த்தாலும்
வாராதோ இனிமேலும்..!
உலகாளும் வல்லரசும்
உன்னறிவை வழிகாட்டும்
கரைதாண்டும் அலைபோல
காலமெலாம் நினைவூட்டும்..!
ஏவுகணை எய்தபின்னும்
எழுந்திருப்பாய் கனவோடு
என்றெண்ணும் இளைஞனவன்
எண்ணமென்றும் உன்னோடு..!
கதைமுடிந்து போனாலும்
கண்தானப் பார்வையைபோல்
தொடர்கின்றாய் என்னுயிரில்
தோல்விகளை தொலைத்துவிட
பிறந்தாலும் இறந்தாலும்
பேர்சொல்லும் ஒருபிள்ளை
அகிலத்தில் நான்கண்ட(காணும்)
அப்துல்கலாம் நீயன்றோ..!