கலாம் உமக்கு சலாம்

அறிவியல் உலகின் பேரறிவாய்
அறிவியல் அறிவின் பெரும்செறிவாய்
அகிலத்தில் விளங்கி உயர்ந்தவரே
அனைவரின் இதயத்தைக் கவர்ந்தவரே

கனவுகள் எங்களைக் காணச்சொன்னாய்
கனவுகள் கண்டிடும் வேளையிலே
காணாமல் கனவாய் மறைந்தாயே
கண்ணீரை பரிசாய் தந்தாயே

உறக்கத்தில் வருவது கனவல்ல
உறங்க விடாததுதான் கனவு
என்றே எல்லோர்க்கும் தினம்சொல்லி
எழுச்சியை இதயத்தில் விதைத்தாயே

தோல்வியை தாங்கிடு எனசொல்லி
துணிச்சலை மனதினில் ஊன்றிவைத்தாய்
இளைஞர்களே இந்த நாட்டிற்கு
இணையற்ற சக்தி என்றுரைத்தாய்

அன்னையின் நாட்டினை வல்லரசாய்
ஆக்கிடவே தினம் துடித்தாயே
மாணவர் சமுதாயம் உயர்ந்திடவே
மதியுள்ள கருத்துகள் படைத்தாயே

கவிதைகள் வாசகம் பொன்மொழியாய்
கணக்கற்ற இதயத்தில் நின்றாயே
நீசொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றால்
நித்திரை குறைத்திட செய்தாயே

அறிவியலில் ஆய்வுகள் செய்திடவே
அரும்பெரும் தடையாய் இருக்குமென்று
இல்லற வாழ்வினையே நீவெறுத்தாய்
எல்லோரும் வியந்திடவே நீஉழைத்தாய்

தத்துவம் எல்லாம் ஒன்றிணைந்த
முத்தான மனிதன் நீயன்றோ
அணுக்களும் வேதியும் உன்சொந்தம்
உனக்கென தேடவில்லை ஒருபந்தம்

ஊராட்சி செய்திடவாய்ப்பு வந்தும்
ஆராய்ச்சி கூடத்தை தேர்ந்தெடுத்தாய்
பிரசிடென்ட் பதவியில் இருந்துகொண்டும்
பிஞ்சி நெஞ்சங்கைள நீரசித்தாய்

அக்னி சிறகுகள் எழுதிவைத்து
அடுத்த தலைமுறைக்கு வழிசமைத்தாய்
முக்கனி சுவைகொண்ட பேச்சாலே
தக்கபடி மனதினில் இடம்பிடித்தாய்

மழைமேகம் போன்றதொரு மனமும்கெண்டு
பிழையேதும் செய்யாத பெரியனானாய்
இழையோடு இழைபின்னும் ஆடைபோல
நுழைந்தாயே கலந்தாயே இதயத்துள்ளே

எத்தனையே ஏவுகணை ஏவிவிட்டாய்
ஏவுகணையாக இன்றுநீயே சென்றாய்
மண்ணகத்தை ஆய்ந்தெதால்லாம் பொதுமென்று
விண்ணகத்தை ஆய்வதற்கு சென்றாய்போலும்

பிறப்புஒரு சம்பவமாய் இருந்தாலென்ன
இறப்பைஒரு சரித்திமாய் ஆக்கச்சொல்லி
மானிடர்கள் விழித்திடவே அறிவுறுத்தி
மாமனிதர் என்றேநீ பேறுபெற்றாய்

ராமேஸ் வரத்திலே பிறப்பெடுத்து
ராமனை விடவும்நீ புகழடைந்தாய்
ராமனன்று விட்டதுவோ வில்லில்கணை
ரோகினி-I நீவி்ட்ட ஏவுகணை

பதவிகள் பட்டங்கள் விரும்பாமலே
உதவிகள் செய்தேநீ உயர்ந்துவிட்டாய்
எளிமையை உன்துணையாய் ஆக்கிக்கொண்டு
எளியோரும் உயர்ந்திடவே வழியும்சொன்னாய்

தமிழ்மொழி பேசிடும் தாமரையே
தரணியெலாம் விரும்பிடும் முன்னுரையே
மனிதஇனம் உயரசொன்னாய் பொருளுரையே
மாநிலத்தில் கண்டாயின்று முடிவுரையே

உனைப்பொல மனிதரிந்த மண்ணிலில்லை
இனியாரும் பிறந்திடப் பொவதுமில்லை
என்றுமுன் பெயரோ அப்துல்கலாம்
உன்சேவைக்கு போடுவோம் நாங்கள்சலாம்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (29-Jul-15, 5:44 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 68

மேலே