இன்று காலம் பிழையாகி கலாம் ஆனது
காலமின்று தோற்றதடி
கலாமென்று உருமாறி
அழியாத வரலாற்றில்
அப்துல்கலாம் பேரெழுதி
பாரெங்கும் நேசிக்கும்
பாத்திரனாய் வாழ்ந்தமகன்
நேசிக்கும் நாட்டினிலே
நெஞ்சுருக வீழ்ந்தானோ..!
ஆக்கமெனும் அறிவியலை
அன்பாலே ஊட்டியவன்
விடைபெற்று போனானோ
வேற்றுகிரக வளர்ச்சிக்கு..!
புன்சிரிப்பில் பூமுகமாய்
புவியெங்கும் சுற்றியவன்
கனவுகளை விதைத்துவிட
காவியமாய் ஆனானோ..!
இளைஞனவன் கைகளிலே
எதிர்காலம் என்றுசொல்லி
கடையெல்லை போனானோ
கடைசிவரை வாவென்று...!
சுவரொட்டி யில்லாமால்
சொந்தங்கள் கண்டமகன்
இல்லங்கள் புகழ்பாடும்
இம்மண்ணின் தங்கமகன்..!
எவருக்கும் அசையாத
என்னுயிரின் ஏக்கமதில்
கண்ணீரை வரவழைத்த
காரணமும் யாரென்றால்
கலாம்என்று பொருளன்றோ..!