கலாம் கவிதாஞ்சலி
காலனே கொண்டனை கண்ணிமை நேரம்
கனவுகள் காண எழுப்பியவன் கொள்ளவே
வல்லமை நோக்கி விரைய வழிகள்
வகுத்திட்ட வித்தன் கலைத்து
தமக்கென வாழா தகவுடை சான்றோன்
எமக்கென ஏவிய கோள்களும் ஏராளம்
விண்ணில் விரவியே ஆய்ந்து அறியவே
மண்ணிலே மெய்யும் களைந்து
களைத்த கருகாரான் ஊர்தி அகற்றி
தளையறு ஏவூர்தி ஆக்கிடக் கொண்டாயோ
நல்கனவு கானலாய் போகாமல் காக்க
கலாமிங்கு வேண்டும் நிறைந்து
தென்கோடித் தீவில் தமியனாய் தோன்றியே
தன்னையே நம்பித் தனிமரமாய் வென்று
இளையோர் எழுச்சியுடன் ஏற்றம் பெறவே
உழைத்த கலாமே உறங்கு