மயானத்துப் புல்

புலவர் கவிஞர் கவிதைக்காரரென
சிலர் இங்கு இல்லாமல் இருக்கின்றார்
மலரும் மணமும் போலவர் என்றும்
வாசகர் மனதில் நின்று நிலைக்கின்றார்.

மனோண்மணிய நட ராசனைப் போலவே
எங்கெங்கொரு இலைபூ கனி அகப்படினும்
அங்கங்கு நின்று அதனுடன் பேசுவார்,
தனியே நடப்பார், தனியே சிரிப்பார்,
முனிவரைப் போலவே முகமூடியும் தரிப்பார்.

அன்னை அவரைப் பெற்றவர் சொல்வார்
“சின்னதில் இருந்தே அவன் அப்படித்தான்
எதையாவது கிறுக்கிக் கொண்டே இருப்பான்
புதையலைக் காக்கும் பூதம் போலிருப்பான்”

“என்ன கருமமோ, என்ன இழவோ
என்ன வாழ்க்கை வாழ்கிறேன் இங்கே
எல்லாமே என் தலை எழுத்தென்று”
செல்லாக் காசுபோல் மனைவி அழுவாள்.

’பள்ளி ஆண்டு மலருக்கொரு கவிதை
எழுதித் தாருங்கள் அப்பா’ என்று
அள்ளும் அழகுடை மகளவள் கேட்டால்
வெள்ளியும் பொன்னும் கிடைத்ததாய் மகிழ்வார்.

நண்பர் மத்தியில் கவிதை வாசித்தால்
பண்புடன் “அறுவை” என்பதை மாற்றி
நன்று, அருமை, அற்புதம் என்பார்
மென்மூலையில் மையலை மறைத்த
சின்ன வயது தோழிகள் சிலிர்த்துக்
கையினைக் குலுக்கிக் கள்ளம் புரிவார்.

எல்லாம் அறிந்தும் எல்லாம் புரிந்தும்
“நல்லவன்” அவனோ படுதா இன்றி
மொளனம் தன்னை மகுடமாய் அணிந்து
மயானத்துப் புல்லென மயக்க நிலையில்
மிதிபட்டுச் சாய்ந்தும் நிமிர்ந்து நிற்பார்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் . (4-Aug-15, 1:57 pm)
பார்வை : 89

மேலே